மான்செஸ்டர்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தனது 6வது லீக் ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது.கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இதுவரை 5 லீக் ஆட்டங்களில் 4 வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் நடக்க இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானதால் கிடைத்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா 3வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டியில் 2 வெற்றிகளை வசப்படுத்தினாலே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.காயம் காரணமாக தவான் விலகினாலும், லோகேஷ் ராகுல் அவரது இடத்தை சிறப்பாக நிரப்பியுள்ளார். 4வது வீரராக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கரும் திறமையை நிரூபித்து வருகிறார். அனைத்து வீரர்களுமே நல்ல பார்மில் உள்ள நிலையில், இந்திய அணி தனது 6வது லீக் ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 6 போட்டியில் 1 வெற்றி, 4 தோல்வி, 1 ரத்துடன் 3 புள்ளிகள் மட்டுமே பெற்று 8வது இடத்தில் பின்தங்கியுள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 போட்டியில் வென்றாலும், மற்ற அணிகளின் செயல்பாட்டை பொறுத்து அரை இறுதிக்கு முன்னேற நூலிழை வாய்ப்பு உள்ளது.