மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கோரி வரைபடத்துடன் கர்நாடகா கடிதம்: தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்கக்கோரி வரைபடத்துடன் கூடிய புதிய கடிதத்தை மத்திய அரசுக்கு கர்நாடகா தரப்பில் தற்போது அனுப்பி வைத்துள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து புதிய அணை அமையும் இடம், அதற்கான திட்ட மதிப்பீடு, பலன்கள் உள்ளிட்ட தகவல்களை  உள்ளடக்கிய வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக அனுமதி வழங்கியது. இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணைக் கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலுக்கு எதிராக தமிழக அரசு  தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கர்நாடகாவிற்கு நெட்கல் என்ற ஏரியிலிருந்து போதுமான குடிநீர் கிடைக்கிறது. அதனால் காவிரியில் எந்த புதிய அணையும் கட்ட தேவையில்லை’’ என அதில் குறிப்பிடப்பட்டது.

மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், தனது உத்தரவில், “தமிழகத்தின் மனு தொடர்பாக மத்திய அரசு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்த 3 வாரத்தில் தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த பிப்ரவரி 20ல்  உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி மேகதாதுவில் புதிய அணையை கட்ட அனுமதி கோரியும், முத்தரப்பு பேச்சு வாரத்தையை நடத்த  வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். இதேபோல் மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்  கோரிக்கை மனுவை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் கடந்த 20ம் தேதி கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சகத்தில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வரைபடத்துடன் கூடிய புதிய கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், “கர்நாடகாவை பொருத்தமட்டில் சுமார் 6 கோடியே 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ளது. இதில் காவிரியில் இருந்து வரும் நீரை குடிநீருக்காக மட்டும் 1 கோடியே 80 லட்சம் பேருக்கும் மேல் பயன்படுத்தி வருகின்றனர்.  மற்றவைகளுக்கு பற்றாக்குறையாகத்தான் உள்ளது. அதனால் தான் காவிரி நீர்பாசனக் கழகம் மூலம் மேகதாதுவில் புதியதாக அணை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது முழுமை அடைந்தால் 177.25 டி.எம்.சி தண்ணீரை  சேமித்து வைக்கலாம். இதன் மூலம் தமிழகத்திற்கும் போதுமான குடிநீரையும் வழங்கிட முடியும். இதைத்தவிர மேகதாது அணையின் மூலம் ₹9 ஆயிரம் கோடி செலவில் 400 மெகாவாட் அளவில் மின் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.  அதனால் கர்நாடகாவின் குடிநீர், வறட்சி மற்றும் மின் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கிட வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவின் இந்த கோரிக்கைக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: