சர்வதேச மதச் சுதந்திர அறிக்கை வெளியீடு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் தொடர்கிறது: அமெரிக்கா கவலை

வாஷிங்டன்: ‘‘சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் தொடர்கிறது’’ என சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் அமெரிக்கா கூறியுள்ளது.

சர்வதேச மதச் சுதந்திரத்தின் ஆண்டறிக்கை (2018) வெளியீடு நிகழ்ச்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசியதாவது: பாகிஸ்தானில் ஆசிய பீபி என்ற கத்தோலிக்க கிறிஸ்தவர் இறைபழி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

10 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் அவரை மரண தண்டனையில் இருந்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இன்னும் 40க்கும் மேற்பட்டோர் இதே குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். சீனாவில் முஸ்லிம்கள், திபெத்திய புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், பிளாங்காங் ஆன்மீக இயக்கத்தினர் என 10 லட்சம் பேர் தீவிர துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். ஈரானிலும் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இந்தியா பற்றியும் சர்வதேச மதச்சுதந்திர அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு 3ல் ஒரு பங்கு மாநில அரசுகள் மதமாற்ற தடுப்பு சட்டத்தை, பசுவதை தடை சட்டத்தையும் அமல்படுத்தியுள்ளன. இதன் மூலம் பசு பாதுகாவலர்கள் என்ற இந்து அமைப்பினர், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கட்டாய மதமாற்றம் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை இருப்பதால் சிறுபான்மை  சமுதாயத்தினருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஷன்னி முஸ்லிம்கள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில், சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெருங்கிய நட்பு நாடு என்பதால், சவுதியின் நடவடிக்கை பற்றி இந்த அறிக்கையில் அமெரிக்கா எதுவும் கூறவில்லை.

Related Stories: