தொடரும் கடத்தலால் பறிபோகும் நீராதாரம் கொலைக்கும் அஞ்சாத மணல் மாபியாக்கள்: அரசுத்துறை கருப்பு ஆடுகளால் அலறும் அதிகாரிகள்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் பற்றிய தகவல் கொடுப்பவர்களை காவல்துறையில் உள்ளவர்களே காட்டி கொடுக்கும் சூழ்நிலையில், கொலை செய்யவும் அஞ்சாமல் மணல் மாபியாக்கள் துணிச்சலுடன் செயல்படுகின்றனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 93 கி.மீ தொலைவும், ஆந்திர மாநிலத்தில் 47 கி.மீ தொலைவும், தமிழகத்தில் 222 கி.மீ தொலைவும் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, மேல்மொணவூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை பகுதிகள் வழியாக பாயும் பாலாற்று படுகையில்தான் 24 மணிநேரமும் மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

அதோடு பாலாறும் தனது தடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. வேலூர் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி நிர்வாகங்களும் சேகரிக்கும் குப்பைகளை பாலாற்றில் கொட்டுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்ைகயில் இந்தியாவில் மாசடைந்த 7 நதிகளில் பாலாற்றையும் குறிப்பிட்டிருந்தது. இதனால், பாலாற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் நிலத்தடி நீர் விஷமாகி வருவதுதான் உண்மை.

மணல் கடத்தலில் தொடங்கி, பாலாற்றில் அரங்கேறும் இத்தகைய சமூக விரோத செயல்களை கண்காணித்து தடுக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் போலீசார் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதுதான் சமூக ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது. பாலாற்றில் கழிவுநீர் திறந்து விடுவது, குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவது ஆகியவற்றை தடுத்து பாலாற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டியது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கடமை.

இதுதவிர மணல் கடத்தலை தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, சுரங்கத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கடமை. இதுபோன்று பாலாற்றினை பாதுகாப்பதில் அரசின் பல்வேறு துறைகளுக்கும் பொறுப்பு இருக்கும் நிலையில், ஒவ்வொருவரும் மற்றொருவரை கைகாட்டி பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரத்திலும், அதிகாலையிலும் மட்டுமே மணல் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. இந்த நேரத்தில் ரோந்து செல்லும் போலீசார் மணல் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது.

மணல் கடத்தல் கும்பலிடம் கணிசமான தொகை வாங்கி கொண்டு காட்டிக் கொடுப்பதால், மணல் கடத்தலை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக நேர்மையான அதிகாரிகளும், போலீசாரும் வேதனை தெரிவிக்கின்றனர்.  மணல் கடத்தலை தடுக்கிறார்களோ இல்லையோ, துப்பு கொடுப்பவர்களை காட்டி கொடுக்கும் கடமையை காவல்துறை, வருவாய்த்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் சரியாக செய்வதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு காவேரிப்பாக்கம் பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க சென்ற பெண் ஆர்டிஓவின் கார் மீது மணல் மாபியாக்கள் லாரியை மோதி கொல்ல முயன்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் அடுத்த வளர்புரம் நந்தியாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரி, டிராக்டர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

அப்போது, விஏஓ மற்றும் விஏஓவின் உதவியாளர் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியது. குடியாத்தம்- ஆம்பூர் சாலையில்இதுபோன்று கொலை முயற்சி, அதிகாரிகளை கடத்தி செல்வது என்று மணல் மாபியாக்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து செல்வதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அலறி ஓட்டம் பிடிக்கின்றனர். பொதுமக்கள் தகவல் கொடுத்தாலும் மவுனமாகவே உள்ளனர். தகவல் கொடுப்பவர்களையும் காட்டி கொடுப்பதால், வீடு புகுந்து கடத்தல் கும்பல் மிரட்டல் விடுக்கிறது. இதுபோன்று மணல் கடத்தல் கும்பல் கொலைக்கும் அஞ்சாமல் காரியத்தை செய்யும் துணிச்சலுக்கு காரணமே மணல் கொள்ளையர்கள் பணமழையில் நனைவதுதான். தினமும் குறைந்தப்பட்சம் ₹5 ஆயிரம் வரை மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துபவர்களே சம்பாதித்து விடுகின்றனர்.

இதுதவிர அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தி விற்பனை செய்வதில் ஒரு நாளைக்கு ₹2 லட்சம் வரை சம்பாதித்து விடுகிறார்களாம்.  இந்த பட்டியலில் ஆளுங்கட்சி அமைச்சர், நிர்வாகிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியை தவிர எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் ஆளுங்கட்சியினருடன் கூட்டு சேர்ந்து மணல் கடத்தலில் ஏகமாக சம்பாதிக்கின்றனர். இதுதவிர மணல் கடத்தலால் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அரக்கோணம் அடுத்த நந்தியாற்றில் மணல் அள்ளும்போது, மணல் சரிந்து தொழிலாளி ஒருவர் பலியான பரிதாப சம்பவம் நடந்தது. அதேபோல், நள்ளிரவில் டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டு வேகமாக சென்றபோது, அரக்கோணம் கணபதிபுரம் பகுதியில் எதிரே வந்த பைக் மீது ேமாதியதில், பைக்கில் வந்த 2 பேர் பலியாகினர்.

இதேபோல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மேல்மொணவூரில் மணல் மாட்டு வண்டி ஏறியதில் சிறுவன் பலியானான். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் பாலாற்றில் மணல் கடத்திக் கொண்டு வேகமாக சென்ற மாட்டு வண்டி கம்பத்தில் மோதியது. இதில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானது. இதுதவிர கொளுத்தும் வெயில், மழையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதால், மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒருபுறம் வேதனை தெரிவிக்கின்றனர். ஆந்திராவில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தல் தமிழக தொழிலாளிகளின் உயிரை பலிவாங்கும் நிலையில், செம்மரக்கட்டைக்கு இணையாக, வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் தலை தூக்கி வருகிறது. உயிர்பலி கொடுத்தாவது மணலை கடத்தி பணம் சம்பாதிக்க துணிந்துவிட்டவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி தேவை

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. அப்போது, பாதுகாப்பு கருதி பாலாற்றின் இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. அதற்கு முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் பாலாற்றின் இருகரைகளிலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துள்ளது. மேலும் பாலாற்றை ஆக்கிரமித்து விவசாயமும் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பாலாறு ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள் பட்டா வழங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கின்றனர் பொதுமக்கள். எனவே, பாலாற்றில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை நிலவி வருகிறது.

மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள்

இதுகுறித்து சுரங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மணல் கடத்தலில் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தால் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம் வாரியாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்படும் வரையில், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை திரும்ப பெற ஐகோர்ட்டில் மட்டுமே மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டாலும், அதிகாரிகள் ஆய்வு செய்ய போலீசார் ஒத்துழைப்பு அவசியம்’ என்றனர்.

துப்பு கொடுக்கும் போலி நிருபர்கள்

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைத்து எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். ஆனால், தனிப்படையினர் எந்த இடத்தில் ஆய்வு செய்ய செல்கின்றனர் என்பதை கடத்தல்காரர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்கின்றனர். போலீசார் சிலரே காட்டி கொடுக்கும் நிலையில், பல்வேறு பத்திரிகைகள் பெயரை சொல்லிக் கொண்டு வாலாஜா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் போலி நிருபர்கள் மணல் கடத்தல்கார்களிடம் வசூல் செய்து வருகிறார்களாம். போலீசாரும் போலி நிருபர்கள் சிலரின் தொடர்பில் இருக்கின்றனராம். இதனால், போலீசார் ஆய்வுக்கு செல்லும் இடங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் போலி நிருபர்கள் கடத்தல்காரர்களுக்கு தகவல் கொடுப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

Related Stories: