பேட்டையில் அதிகாரிகள் விறுவிறுப்பு 12 மணி நேரத்தில் 11 நல்லிகள் அமைத்து அசத்தல்: 5 ஆண்டு போராடிய பொதுமக்கள் ஆனந்த கண்ணீர்

பேட்டை: நெல்லை அருகே தண்ணீருக்காக 5 ஆண்டு போராடிய பொதுமக்களுக்கு நேற்று விடிவுகாலம் பிறந்தது. மேலிட உத்தரவால் இங்குள்ள அதிகாரிகள் 12 மணி நேரத்தில் 11 நல்லிகள் அமைத்து கொடுத்து தண்ணீர் வழங்கி அசத்திவிட்டனர்.நெல்லை அருகே உள்ள பேட்டை வஉசி நகர் (சத்யாநகர்) பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதிக்கரையோரம் ஆக்கிரமித்து குடியிருந்தவர்கள் வீடுகள் 5 ஆண்டுக்கு முன் இடிக்கப்பட்டதால் அவர்களுக்கு மாற்று இடமாக வஉசி நகரில் உடனடியாக 2 அடுக்கு கொண்ட 144 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு அவர்களை அங்கு குடியமர்த்தினர். இதுபோல் சுத்தமல்லி, பேட்டை காந்தி நகர், பாட்டப்பத்து உள்ளிட்ட அப்பகுதி மக்கள் ஏழைகளாகிய எங்களுக்கும் வீடுகள் கட்டி தரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்களுக்காக 3 ஆண்டுக்கு முன் 432 வீடுகள் கட்டப்பட்டு 317 பேருக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு தற்போது நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இத்தனை குடும்பத்தினருக்கும் அங்கு ஒரு நல்லிதான் அமைத்து கொடுத்திருந்தனர். காலை 7 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் விடுவார்கள். இதனால் தண்ணீருக்காக அங்கு அடிதடியே நடக்கும். பாதிபேருக்கு மேல் தண்ணீர் கிடைக்காது. வெளியில் எடுத்து வந்து சமாளித்து வந்தனர். தண்ணீர் வசதி இல்லாததால் யாரும் அங்கு வந்து குடியேற முன்வரவில்லை. ஏராளமான வீடுகள் காலியாக கிடக்கின்றன. இங்கு வசித்து வரும் மக்கள் மேலும் நல்லி அமைத்து தரும்படியும், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும்படியும் குடிசைமாற்று வாரியம், மற்றும் மாநகராட்சி, கலெக்டர் என சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனு கொடுத்தனர். கடந்த  5 ஆண்டுகள் போராடியதுதான் மிச்சம். எந்த பலனும் ஏற்படவில்லை. கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது அவர்கள் கோரிக்கை மனு. அப்பகுதி பொதுமக்களின் அவல நிலையை பத்திரிகைகளும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்தன. மீடியாக்களிலும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்த அவலநிலையை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டினர். அங்குள்ள மக்களிடம் பேட்டி எடுத்து விளாசி தள்ளிவிட்டனர். இது சென்னையில் உள்ள நீர் மேலாண்மை வாரிய இயக்குநகரத்தின் கதவை தட்டியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இயக்குனர், உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்படி குடிசை மாற்று வாரிய இயக்குனரகத்திற்கு உத்தரவிட்டார். அவர்கள் மதுரையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தெரிவிக்கவே, நெல்லை கலெக்டருக்கும் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நடவடிக்கையில் இறங்கினார். இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு நெல்லை மாநகராட்சி அதிகாரிகள், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் பணியாளர்களுடன் பேட்டை வஉசி நகருக்கு ஜேசிபி எந்திரத்துடன் வந்தனர். அதோடு ஒரு லாரியில் பைப்புகளையும் கொண்டு வந்தார்கள்.

வந்த வேகத்தில் பணிகள் மின்னல் வேகத்தில் தொடங்கியது. ஜேசிபி மூலம் குழிகள் தோண்டத்தோண்ட அதில் குழாய்களை பதித்தபடி வந்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய பணி இரவு 8 மணி வரை நீடித்தது. அந்த நேரத்திற்குள் குழாய்களை போட்டு 11 நல்லிகளை அமைத்துவிட்டனர். உடனடியாக தண்ணீர் இணைப்பும் கொடுக்கப்பட்டது.இதையறிந்த மக்கள் குடத்துடன் வந்து ஆர்வத்துடன் தண்ணீர் பிடித்தனர். 5 ஆண்டுகளாக நாங்கள் பட்டபாட்டிற்கு இன்றுதான் விமோசனம் கிடைத்துள்ளது என முகம் மலர்ந்தனர்.துரிதமாக செயல்பட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினர்.

Related Stories: