தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி வழங்க வேண்டும் : நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்று வரும் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மராட்டியத்துக்கு வழங்கப்பட்டது போல் தமிழகத்துக்கும் சிறப்பு நிதி அளிக்க கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். மேலும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ரூ.17,800 கோடி மதிப்புள்ள ஆனைகட்டி குடிநீர் திட்டத்துக்கான நிதி ஆதாரம் தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை தரப்பட உள்ளதாகவும், ஆனைகட்டி குடிநீர் திட்டத்துக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணா - கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்வச் பாரத் திட்டத்தை போல மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ6,000 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.1.20 லட்சம் கோடியிலிருந்து ரூ3 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: