ஆயில் நிறுவனங்களை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

நாமக்கல்: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 5 ஆண்டுக்கு ஒருமுறை ஐஓசி, எச்பிசி, பிபிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன், டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, சமையல் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

கடந்த ஆண்டு முடிந்த புதிய வாடகை ஒப்பந்த டெண்டரில், சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான 740 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில்,தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்தில், ஆயில் நிறுவனங்களால்,740 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காதது குறித்து உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

கூட்டத்துக்கு பின்பு சங்கத்தலைவர் பொன்னம்பலம்,செயலாளர் கார்த்திக் ஆகியோர் அளித்த பேட்டி: நடந்து முடிந்த 2018-2023ம் ஆண்டுக்கான டெண்டரில், ஆயில் நிறுவனங்கள் புதிய விதிமுறைகளை அறிவித்தது.இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். இருப்பினும் ஆயில் நிறுவனங்கள் காத்திருப்பு பட்டியல் அடிப்படையில்,வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறினார்கள்.

தற்போது,டெண்டர் முடிந்து 9 மாதமாகியும்,740 எல்பிஜி வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தென்மண்டலத்தில் சமையல் எரிவாயு லோடு ஏற்றும்-இறக்கும் பணியில் ஈடுபட்டு வரும் எங்களது சங்கத்துக்கு சொந்தமான 4,800 லாரிகளை நிறுத்தி, ஆயில் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: