பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய தொழில் கொள்கை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற உரையில் தகவல்

புதுடெல்லி: ‘‘நாடு முழுவதும் வேலை வாய்ப்பை அதிகரிக்க புதிய தொழில் கொள்கை கொண்டு வரப்படும். பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்’’ என்று நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நேற்று நடந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் உரை நிகழ்த்தினார்.

அதில் அவர் கூறியதாவது: மக்களவையில் முதல் முறையாக அதிக பெண்கள் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். இதேபோல் இம்முறை மக்களவையில் பலர் முதல் முறை வெற்றி பெற்றவர்கள் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.  

நாட்டில் வறட்சி பாதித்த பகுதிகளில், எனது அரசால் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  சாதி, பேதமற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதே அரசின் இலக்கு. நகரங்களோடு சேர்ந்து கிராமங்களும் வளர்ச்சி அடைவதுதான் முறையானதாக இருக்கும். இதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. புதிய இந்தியாவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மக்களின் கனவுகளை நிறைவேற்ற இந்த அரசு முழு வீச்சில் செயல்படும்.

மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடும். மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்வோம். நாட்டின் வளர்ச்சிக்கு வலிமையான உள்கட்டமைப்பு அவசியம் என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது என கூறினார்.தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வேளாண்துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட மசோதா மூலம் இத்துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நியாயம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஜிஎஸ்டி வரியானது, சிறு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஒரே வரியினால் வர்த்தகர்கள் பலன் அடைந்துள்ளனர்.

புதிய தொழில் கொள்கை: கருப்பு பணம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு விஷயம். இதனால் அதற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் விரைவில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும். 1956ம் ஆண்டுக்கு பின்னர் 1991ம் ஆண்டு தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கு மாற்றாக புதிய தொழில் கொள்கை கொண்டு வரப்படும்.பெண்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதற்காக அவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அவர்களுக்கு சம உரிமை கிடைக்க முத்தலாக் ஒழிப்பு அவசியம். இதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒரே தேர்தல் அவசியம்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேர்தல் நடப்பது வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் நாடு முழுவதும், மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகள் ஆலோசிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது, இப்போதைய காலக்கட்டத்தின் மிக அவசியமான ஒன்று. இதன் மூலம் வளர்ச்சியை வேகமாக ஊக்குவிக்க முடியும். நாட்டு மக்களும் இதன் மூலம் பலனடைவார்கள்.

தீவிரவாதம் எந்த உருவத்திலும் ஏற்றுக் கொள்ளப்படாது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விஷயத்தில் சர்வதேச நாடுகள் இந்தியாவின் பக்கம் இருந்தன. இது மிக முக்கியமான நடவடிக்கை. வரும் 2022ம் ஆண்டில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் மற்ற நாடுகளுடனான நமது உறவு மிக வலுவடைந்து வருகிறது.இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

வறட்சியை போக்க சிறப்பு திட்டம்:

ஜனாதிபதி தனது உரையில், ‘நமது எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும். அதன்படி ஜலசக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். வறட்சி பாதித்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு வறட்சியை போக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். சாதி, பேதமற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. நாட்டின் 112 மாவட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் பெரிய அளவில் நடந்து வருகின்றன’ என்றார்.

காவிரி நீர்பிரச்னை குறித்து முழக்கமிட்ட திமுக எம்பிக்கள்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது, தமிழகத்தை சேர்ந்த திமுக எம்பிக்கள் தமிழகம், கர்நாடகா இடையே நிலவி வரும் காவிரிநீர் பிரச்னை குறித்து அவையில் முழக்கமிட்டனர். அப்போது காவிரி நீர் கேட்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட கோரிக்கை பதாகைகளையும் திமுக எம்.பி.க்கள் கையில் பிடித்திருந்தனர்.

இதை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திமுக எம்பிக்களை சமாதானப்படுத்தும் வகையில் இருக்கையில் சென்று அமருங்கள் என கேட்டுக்கொண்டார். இதன்பின் இருக்கையில் அமர்ந்தனர். அவையில் ஜனாதிபதி, ரபேல் விமான ஒப்பந்தம், அந்த போர் விமானங்கள் எப்போது இந்தியாவிற்கு வரும் என்பது குறித்த விவரங்களை தெரிவித்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிரித்தபடி மற்ற எம்பிக்களுடன் சேர்ந்து மேஜையை தட்டி வரவேற்றார்.

ராகுலுக்கு வாழ்த்து:

ஜனாதிபதி உரைக்கு பின்னர், நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்க்கட்சி தலைவர்கள் சூழ்ந்து கொண்டு உரையாடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ராகுல் அருகே அவரது தாயார் சோனியாவும் இருந்தார். இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா ராகுலை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சமாஜ்வாடி எம்பி அமர்சிங் ராகுல், சோனியா ஆகியோருடன் உரையாடினார்.

இதையடுத்து அவையின் மையமண்டபத்திற்கு வெளியே சென்றபோது சோனியாகாந்தியும், எதிரே வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அவையில் ஜனாதிபதி உரையாற்றியபோது ராகுல்காந்தி உள்ளிட்ட பெரும்பாலான எம்பிக்கள் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

Related Stories: