பிளாஸ்டிக் பொருள் விற்பனையா? ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டு: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை பட்டாசு கடைக்குள் வைத்து ஷட்டரை ஊழியர்கள் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது உற்பத்தி செய்தாலே, பதுக்கி வைத்தாலோ அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் தஞ்சை கீழவாசல் பகுதி கடைகளில் சோதனையிட்டனர். அப்போது மார்க்கெட் ரோடு பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  துப்புரவு ஆய்வாளர்கள், பெண் மேற்பார்வையாளர் உட்பட 6 பேர் கடைக்குள் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் உள்ளதா என்று சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது கடைக்குள் இருந்த 2 ஊழியர்கள் திடீரென வெளியே ஓடி வந்து ஷட்டரை இழுத்து மூடினர். மேலும் கடைக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்து விட்டு ஓடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைக்குள் மாட்டி கொண்ட பெண் உட்பட 6 அதிகாரிகளும் என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். அப்போது வெளியே நின்றிருந்த நகர்நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஷட்டரை தூக்கி 6 பேரையும் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போலீசார், கடையின் உரிமையாளர் சங்கர் மற்றும் கடை ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கடைக்குள் இருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘கடைக்குள் அதிகாரிகளை வைத்து பூட்டிய சம்பவத்தில் அந்த கடையை சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் ’என்றனர்.

Related Stories: