தமிழகம், கேரளாவில் நடத்தப்படும் மதுக்கடைகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் ஜெகன் உத்தரவு

திருமலை: தமிழகம், கேரளாவில் அரசு சார்பில் நடத்தப்படும் மதுக்கடைகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்பு மாநிலம் முழுவதும்  பாதயாத்திரை சென்றார். அப்போது   பெண்கள் மது விற்பனையால் தங்கள் கணவர்கள் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தையும் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் இதர பொருட்களையும் விற்று மது குடிப்பதாகவும், இதனால் உடல் ஆரோக்கியம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் இளைஞர்களும் மது அருந்தி தங்கள் வாழ்க்கையை சீரழித்து  கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். இதனால் தனது தேர்தல் பிரசாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றபோது மாநிலம் முழுவதும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கலால் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில்  முதல் கட்டமாக கிராமப் பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் சிறிய பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரக்கூடிய (பெல்ட் ஷாப்)  கடைகளை மூட வேண்டும். அரசு உத்தரவை மீறி பெல்ட் ஷாப் நடத்தி வந்தால் அந்த கடைகளுக்கு மது சப்ளை செய்த மதுக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தமிழகம், கேரளாவில் அரசே மதுபானங்களை விற்பனை  செய்து வரும் நடைமுறை குறித்தும் அந்தந்த மாநிலங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என  அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார்.

Related Stories: