காவல்துறைக்கு சவால் விட்டு கஞ்சா வியாபாரி வீடியோ: சமூக வலைதளத்தில் வைரலாகிறது

நெய்வேலி: நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்யும் ஒரு வாலிபர் வாட்ஸ்அப்பில்  பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞன் நான், பெங்களூர் மணி என்ற மணிகண்டன்  பேசுகிறேன், நான் தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன், இதனை தடுக்க நினைக்கும் சுரேஷ் என்பவரை கொலை செய்ய போகிறேன். போலீசார் என்னை கைது செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியதுடன், கஞ்சா விற்றவர் மற்றும் கஞ்சா அடிப்பவர் என அனைவரும் சேர்ந்து வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் பேசுபவர் பெங்களூரை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் என்றும், இவர் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் உள்ள ஓம்சக்தி நகரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. பெங்களூரிலிருந்து நெய்வேலி வரும்போது, கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்து நண்பர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் ஒரு நண்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது சக நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா போதையில் காவல்துறைக்கு சவால்விடும் வகையில் வீடியோவை பதிவு செய்தது தெரியவந்துள்ளது. இதை அறிந்த நெய்வேலி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் இச்சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: