போட்டிப்போட்டு சீனா, பாகிஸ்தான் உற்பத்தி அணு ஆயுதங்களை அதிகரிக்காத இந்தியா: ஓராண்டாக பழைய நிலையே நீடிக்கிறது

ஸ்டாக்ஹோம்:  சீனா, பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டாக இந்தியா அணு ஆயுதங்களை அதிகரிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சுவீடனை சேர்ந்த, தி ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் 2019ம் ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் கடந்த ஓரு ஆண்டில் அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் இருநாடுகளின் அணு ஆயுத கையிருப்பு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தனது ஆயுதக் கிடங்கில் சுமார் 150-160 அணு ஆயுதங்களை  கொண்டுள்ளது. இதேபோல சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை 290ஐ கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் அணு ஆயுதங்கள் 130-140 என்ற எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. கடந்த ஒரு ஆண்டாக இந்தியா அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை. 2019ம் ஆண்டு தொடக்கத்தில் சீனா 280 அணு குண்டுகளை வைத்திருந்தது. தற்போது அதனை 290ஆக உயர்த்தியுள்ளது. பாகிஸ்தானும் தனது அணு ஆயுத கையிருப்பை 140-150 என்ற எண்ணிக்கையில் இருந்து 150-160 என்ற எண்ணிக்கைக்கு  அதிகரித்துள்ளது. இஸ்ரேலும் 80ல் இருந்து 90 ஆகவும், வடகொரியா 10-20ல் இருந்து 20-30ஆகவும் அணு ஆயுதங்களை உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் 2018ம் ஆண்டு தொடக்கத்தில் 130-140 என்ற எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் இருந்தன. 2019ம் ஆண்டு தொடங்கிய பின்னரும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை இதே அளவிலேயே நீடிக்கிறது. பல்வேறு நாடுகளின் அணு ஆயுதங்கள் அதிகரித்த நிலையிலும்,  மொத்தமாக ஆய்வு செய்ததில் 2018ம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்ததை காட்டிலும் 2019ம் ஆண்டில் அணு ஆயுத எ்ண்ணிக்கை குறைந்துவிட்டதாக அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய 9 நாடுகளில் கடந்த 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்த அணுகுண்டுகளின் எண்ணிக்கை 14,465 ஆகும். தற்போது இந்த  எண்ணிக்கையானது 13,865 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் அணு ஆயுத இருப்பை அதிகரிக்கும் வகையில் அணுப்பிளவு பொருள் உற்பத்தி திறன்களை இந்தியாவும், பாகிஸ்தானவும் விரிவுப்படுத்தி வருவதாக அணு ஆயுத குறைப்பு, ஆயுத கட்டுப்பாடு மற்றும்  பரவல் அல்லாத திட்டத்தின் இயக்குனர் ஷானன் கெயில் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: