புதுடெல்லி: டெல்லியில் வேன் டிரைவரை வாகனத்தில் இருந்து கீழே இழுத்துதள்ளி போலீசார் மூன்று பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் போலீசார் வேன் மீது டெம்போ வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக வேன் டிரைவருக்கும், போலீசார் மூன்று பேருக்கும் இடையே எற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. போலீசார் மூன்று பேர் சேர்ந்து கொண்டு பட்டப்பகலில் நடுரோட்டில் வேன் டிரைவரை சரமாரியாக தாக்கும் சம்பவத்தை வேடிக்கை பார்த்த பார்வையாளர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த வீடியோவில், டெம்போ வேனும், போலீசாரின் வாகனமும் மோதிக்கொண்டதன் காரணமாக வேனை போலீசார் தடுத்த நிறுத்துகின்றனர். அப்போது வேனை நகர்த்த முற்பட்டபோது வேன் சக்கரம் போலீசார் ஒருவரின் காலில் மீது ஏறி இறங்குகிறது. இதனால் வேன் டிரைவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. ஒரு நிலையில், போலீசார் அந்த வேன் ஒட்டுநரை வேனிலிருந்து கீழே பிடித்து இழுத்து தள்ளுகின்றனர். நிலை தடுமாறி கீழே விழும் அவரை போலீசார் மூன்று பேர் சூழ்ந்து கொண்டு லத்தியால் சரமாரியாக தாக்குகின்றனர்.