தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி மெட்ரோ ரயில் நிலையங்களின் கழிவறைகள் மூடல்

சென்னை: தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக மெட்ரோ ரயில் நிலைய கழிவறைகள் மூடப்பட்டன. சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக இரவு, பகல் பார்க்காமல் பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து வருகின்றனர். போதிய நீர் இல்லாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக உணவு விடுதிகளும், தொழிற்சாலைகளும், ஐ.டி நிறுவனங்களும் மூடப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்திற்கு மெட்ரோ ரயில் நிலையங்களும் தப்பவில்லை. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களின் ஏ.சி பயன்பாட்டை குறைக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அனைத்து சுரங்கப்பாதைகளில் செயல்படும் மெட்ரோ ரயில் நிலையங்களின் ஏசி பயன்பாட்டை நிர்வாகம் குறைத்தது. இதேபோல், ஏ.சி பயன்பாடு முழுமையாக குறைக்கப்பட்டு  மின்விசிறிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கழிவறைகளை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் கழிவறை மூடப்பட்டது.

இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதேபோல், அண்ணாநகர் டவர், எழும்பூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களின் கழிவறைகளை மூட முடிவு செய்துள்ளதாகவும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது:

மெட்ரோ ரயில் நிலையங்களில் 7 முதல் 8 ஆயிரம் லிட்டர் வரையில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கழிவறைகளுக்கு 2 முதல் 3 ஆயிரம் லிட்டர் வரையில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் கழிவறைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர். மெட்ரோ விளக்கம்: மெட்ரோ நிர்வாகம் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில், ‘‘பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் எவ்வித தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை. இதுகுறித்து பரப்பப்படும் புகைப்படங்கள் வதந்தியே, பலர் கழிவறைகளை தங்குதடையின்றி பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில்நிலையத்தில் உள்ள எந்த கழிவறைகளும் மூடப்படவில்லை’ என்று கூறியுள்ளது.

Related Stories: