13 மாவட்ட நீர்நிலைகளை தூர்வார செலவான நிதி எவ்வளவு? : முதன்மை செயலர் அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பது குறித்து, பொதுப்பணித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரைச் சேர்ந்த வக்கீல் கிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தில் 6 ஆயிரம் கண்மாய்கள், 3 ஆயிரம் குளங்கள் உள்ளன. இவற்றின் நீராதாரமாக சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, தேனாறு, உப்பாறு, நாட்டாறு, விருசுகனியாறு, பாம்பாறு உள்ளிட்ட 10 சிற்றாறுகள் உள்ளன. இந்த நீர்நிலைகள், சிற்றாறுகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், ஐகோர்ட் கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள், அவற்றில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விபரம், ஆக்கிரமிப்பு அகற்றப்படாதவை எவ்வளவு, நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை ெசயலர், நகராட்சி நிர்வாக செயலர் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: