திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சொந்த ஊர்களுக்கு திரும்ப பஸ்கள் கிடைக்காததால் மறியல்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் ஆனி மாத பவுர்ணமியையொட்டி மதியம்  முதலே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

இந்நிலையில், கிரிவலம் முடித்த பக்தர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்கள் கிடைக்காததால் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். இதனால், குழந்தைகளுடன் வந்திருந்த பெரும்பாலான பக்தர்கள் பஸ்சில் ஏற முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் சென்னை, புதுச்சேரி செல்ல போதிய பஸ்கள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த  போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதலாக பஸ்களை இயக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பக்தர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதிகாலையில் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: