ரவுடி வல்லரசு என்கவுண்டர் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய டிஜிபிக்கு நோட்டீஸ்

சென்னை: ரவுடி வல்லரசு என்கவுண்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் மனித உரிமை ஆணைய டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யார் அந்த ரவுடி வல்லரசு

 சென்னை வியாசர்பாடி, தேசிகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வல்லரசு (20). பிரபல ரவுடி. இவர்மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, எம்கேபி நகர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியன்று நடந்து சென்ற 6 பேரை வழிமறித்து, பட்டாக்கத்தியால் வெட்டி நகை, பணம் பறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகள் தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர்.

வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல்

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் வியாசர்பாடி, எம்எம்.கார்டன் பகுதியில் பொதுமக்களிடம் வல்லரசு கத்தியை காட்டி மிரட்டுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் தலைமை காவலர் பவுன்ராஜ், காவலர் ரமேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு அடிதடி தகராறில் ஈடுபட்டு பொதுமக்களை பட்டாக்கத்தியால் தாக்கிய வல்லரசுவை இருவரும் பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது தலைமை காவலர் பவுன்ராஜுக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து காவலர் ரமேஷை துரத்தி சென்று வல்லரசு சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டான்.இதுகுறித்து தகவலறிந்ததும் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் மில்லர், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் எஸ்ஐக்கள் பிரேம்குமார், தீபன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

போலீசார்களை தாக்கியதால் என்கவுண்டர்

இந்நிலையில், மாதவரம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள லாரி யார்டு பகுதியில் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாக நள்ளிரவு 2 மணியளவில் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தனிப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் வருவதை பார்த்ததும் கதிர் தப்பி ஓடிவிட்டான். போலீசாரை பார்த்து ஆத்திரமடைந்த ரவுடி வல்லரசு, தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியால் தனிப்படை போலீசாரை சரமாரியாக வெட்டியுள்ளான்.

மேலும் போலீசாரை தாக்கிவிட்டு வல்லரசு தப்ப முயற்சிக்கவே, இன்ஸ்பெக்டர்கள் மில்லர், ரவி ஆகியோர் ரவுடி வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் வல்லரசுவின் மார்பில் 2 குண்டுகளும், காலில் ஒரு குண்டும் துளைத்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி வல்லரசு ரத்த வெள்ளத்தில் பலியானான். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பலியான ரவுடி வல்லரசுவின் சடலத்தை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலி என்கவுண்டர் என தந்தை குற்றச்சாட்டு

வல்லரசு சென்னை மாதவரம், சீத்தாபதி நகர் 19-வது தெருவில்  தந்தை சாமிக்கண்ணு, அம்மா கருப்பாயி, சகோதரர்கள் பாண்டியன் (28), அருள் (25), அக்கா தனலட்சுமி (21) ஆகியோருடன் வசித்து வந்தான். தந்தை சாமிக்கண்ணு  கூறியதாவது:  என் பையன் ரவுடியே இல்லை.  அவன் சின்ன சின்ன தவறுகள் செய்து  வந்தான். தற்போது திருந்தி  வியாசர்பாடியில் இருந்து வீடு மாறி மாதவரம்  பகுதியில் வசித்து வருகிறோம்.   கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.  நேற்று முன்தினம் கூட வேலைக்குத்தான் சென்று வந்தான். யாரோ சொன்ன பேச்சை  கேட்டு போலீஸ்காரர்கள் என் பையனை அநியாயமாக சுட்டுக்கொன்னுட்டாங்க. இதற்கு  நீதி வேணும். கண்டிப்பாக வழக்குத் தொடருவேன் என்று கூறியுள்ளார்.

மனித உரிமை ஆணைய டிஜிபிக்கு நோட்டீஸ்

இந்நிலையில் வல்லரசு என்கவுண்டர் குறித்து தாமாக முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம். வழக்காக விசாரணைக்கு எடுத்தது.என்கவுண்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய டிஜிபிக்கு, ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி உத்தரவு பிறப்பித்தார். மேலும் என்கவுண்டர் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க தமிழக பொதுத்துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: