மும்பை: இந்தியாவும் அண்டை நாடான பாகிஸ்தானும் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை காண இருநாட்டினரும் தீவிர ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இந்த போட்டியை மையமாக வைத்து, சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில், புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டி சென்று அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கிண்டல் செய்யும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் உடையை அணிந்த அபிநந்தனை போல தோற்றம் கொண்டவரிடம் இருந்து டீ கோப்பை பாகிஸ்தானியர்கள் பறிப்பது போன்ற காட்சி இருந்தது. அதன் மூலம், உலகக்கோப்பை எங்களுக்குதான் என அவர்கள் கூறுவதுபோல் விளம்பரத்தை உருவாக்கி இருந்தனர்.