அரசு பணத்தை தேர்தலுக்கு செலவு செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு: 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது

திருமலை: அரசு கஜானாவில் இருந்து எடுத்த பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 18ம் தேதி விசாரணைக்கு  வருகிறது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது விஜயவாடாவை சேர்ந்த குடியரசு கட்சி நிர்வாகி அனில் குமார் என்பவர்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், சந்திரபாபு நாயுடு தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு  முன்பாக அன்ன தாத்தா சுகிபவா  என்ற திட்டத்தின் கீழ் 46 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,315 கோடியும், பசுப்பு, குங்குமம் (மஞ்சள் குங்குமம்) என்னும் திட்டத்தின் கீழ்   80 லட்சம் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ₹9,400 கோடி என மொத்தம் ₹10  ஆயிரத்து 715 கோடியை அரசு கஜனாவில் இருந்து எடுத்து பயன்படுத்தினார்.

பின்னர் தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு மகளிர் குழு உறுப்பினர்களையும் தனது சகோதரிகளாக பார்ப்பதாகவும் அதன் காரணமாக மஞ்சள்,  குங்குமம் கொடுத்து ₹10 ஆயிரம் வழங்கியிருப்பதாகவும், தன்னை வெற்றி பெறச் செய்தால்  தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு பேசினார். இதேபோன்று விவசாயிகளுக்கும் அன்ன தாத்தா சுகிபவா திட்டத்தின் கீழ் ₹1,315 கோடி 46 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கினார். இதுகுறித்தும் தேர்தல் பிரசாரத்தின்போது கூறி  தன்னைத் வெற்றிபெறச் செய்தால் தொடர்ந்து வழங்கப்படும்  என்றார். இந்த வீடியோ காட்சிகளையும் மனுவுடன் இணைத்துள்ளேன்.சந்திரபாபு நாயுடு, அரசு கஜானாவில் இருந்து எடுத்த பணத்தை மீண்டும் தான் வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியுள்ளார்.

எனவே  சந்திரபாபு நாயுடுவிடம்  இருந்து அந்த பணத்தை திரும்பப் பெற்று அரசு கஜானாவில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை  ஆந்திர உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட  நிலையில் வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: