அறுவடை சீசன் துவங்கியது விலை இல்லாததால் குடோன்களில் தேங்காய் தேக்கம் : விவசாயிகள் கவலை

பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் தேங்காய் அறுவடை சீசன் துவங்கியுள்ளது. போதிய விலை கிடைக்காததால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை பகுதி, சித்தரேவு, சித்ததையன்கோட்டை, எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, சாலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் தேங்காய்களை கொள்முதல் மும்பை மற்றும் காங்கேயம் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பர். அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய்களை இருப்பு வைப்பதற்காக ஏராளமான குடோன்கள் உள்ளன.

இப்பகுதியில் தொடர்ந்து மழையின்றி வறட்சி நிலவி வருவதால் கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது. ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து வரும் தண்ணீரை கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் தென்னை மரங்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து வருவதால் புதிதாக ஆழ்குழாய் கிணறு தென்னைகளை காப்பாற்றி வருகின்றனர். தற்போது தேங்காய் அறுவடை சீசன் துவங்கியுள்ளது. வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை சரிந்து வருகிறது. இதனால் தென்னந்தோப்புகளிலும், மொத்த கொள்முதல் செய்யும் குடோன்களிலும் தேங்காய்கள் விற்பனை இன்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.

காங்கேயம் மார்க்கெட்டில், சில வாரங்களுக்கு முன்பு மரத்திலிருந்து பறித்த தேங்காய் ஒன்று ரூ.13க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.8 முதல் ரூ.9 வரை விற்பனையாகிறது. பறித்து உரித்த தேங்காய் டன் ஒன்றிற்கு கடந்த மாதம் ரூ 24 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 1 டன் ரூ.22 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் பாதிப்பை தடுக்க அரசே, தேங்காய்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் அய்யம்பாளையம் பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: