டிக்டாக் வீடியோ எடுத்தபோது துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி: உறவினர்கள் 2 பேர் கைது

ஷிர்டி: ‘டிக் டாக்’ ஆப்பில் பதிவேற்றம் செய்வதற்காக துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு நடித்த போது, துப்பாக்கி தவறுதலாக வெடித்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகரைச் சேர்ந்த வாடேகர் குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் இறந்து போன ஒருவரது 10ம் நாள் காரியத்துக்காக ஷிர்டிக்கு வந்திருந்தனர். அவர்கள் ஷிர்டியில் உள்ள பவன்தாம் என்ற ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த பிரதீக் வாடேகர் (17), உறவினர்கள் சன்னி பவார்(20), நிதின் வாடேகர்(27) மற்றும் 11 வயது சிறுவன் ஆகியோர் 104வது எண் அறையில் தங்கியிருந்தனர். இந்த நான்கு பேரில் ஒருவர் தன்னுடன் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்திருந்தார். நேற்று முன்தினம் ஓட்டல் அறையில் இருந்தபோது, ‘டிக் டாக்’ வீடியோ ஷேரிங் ஆப்பில் பதிவேற்றம் செய்வதற்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து அவர்கள் மொபைலில் வீடியோ எடுத்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் டிரிக்கர் அழுத்தப்பட்டு தோட்டா வெளியேறியது. அந்த தோட்டா பிரதீக் வாடேகர் உடலில் பாய்ந்தது. துப்பாக்கி வெடித்ததும் பிரதீக் வாடேகருடன்  இருந்த மற்ற மூவரும் பயத்தில் ஓட்டல் அறையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும், ஓட்டல் ஊழியர் ஓடி வந்து தப்பிச்செல்ல முயன்றவர்களை தடுக்க முயன்றார். அப்போது, துப்பாக்கி வைத்திருந்தவர் ஓட்டல் ஊழியரை மிரட்டி விட்டு அவரும் மற்ற இருவரும் தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரதீக் வாடேகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஷிர்டி போலீசார், சம்பவம் நடந்த அடுத்த சில மணிநேரத்தில் சன்னி பவார் மற்றும் நிதின் வாடேகரை கைது செய்தனர்.

Related Stories: