வேலை நிறுத்தத்தை கைவிடும்படி மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களை எச்சரித்த மம்தா: போலீசார், உறவினர்கள் வெளியேற உத்தரவு

கொல்கத்தா: ‘‘மேற்கு வங்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இளநிலை அரசு மருத்துவர்கள் பணிக்கு மம்தா விடுத்த எச்சரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் அரசு மருத்துவர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கடந்த செவ்வாய் முதல் அரசு இளநிலை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவசர பிரிவு, புற நோயாளிகள், பல்வேறு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகள் தொடர்ந்து செயல்படவில்லை.

மருத்துவர்களின் போராட்டடத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகள் பலவும் மூடப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ சேவையை பெற முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அடைந்துள்ளனர்.

இதனால், கொல்கத்தாவில் உள்ள அரசு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று காலை நேரடியாக சென்றார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுது. மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள், வெளியாட்களை வெளியேற்றும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். மருத்துவமனைக்குள் நோயாளிகளை தவிர யாரையும் அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் 4 மணி நேரத்துக்குள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். அரசின் இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். அப்போது, ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று மருத்துவர்கள் சிலர் கோஷமிட்டனர்.

அவர்களை பார்த்து எச்சரித்த மம்தா, ‘‘வேலை நிறுத்தத்தை கைவிட்டு, மக்களுக்கு சிகிச்சை அளியுங்கள்,’’ என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மருத்துவர்கள் அவரின் கோரிக்கையை நிராகரித்தனர். மம்தா நேரடியாக மருத்துவமனைக்கு வந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சென்ற மம்தா, மருத்துவர்கள் வேலைக்கு திரும்புவதற்கு விதித்த கெடுவை மாலை 2 மணி வரை நீட்டித்தார். அப்போதும் யாரும் வேலைக்கு திரும்பவில்லை.

‘பாஜ - மார்க்சிஸ்ட் காதல் எனக்கு வியப்பை தருகிறது’

அரசு மருத்துவமனையில் பார்வையிட்ட பிறகு மம்தா அளித்த பேட்டியில், ‘‘இளநிலை மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பின்னணியில் பாஜ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சதி உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை தூண்டிவிடும் பாஜ.வுக்கு மார்க்சிஸ்ட் மறைமுகமாக உதவிகள் செய்கிறது. அவர்களிடையே ஏற்பட்டுள்ள காதல் எனக்கு வியப்பை தருகிறது,’’ என்றார்.

கவர்னர் கூட்டம் புறக்கணிப்பு:

மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலின்போது வன்முறைகள் நிகழ்ந்தன. மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னரும் பாஜ, திரிணாமுல் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று வடக்கு 24 பர்கான் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல், பாஜ இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டது. இம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார். ஆனால், இந்த கூட்டத்தை மம்தா புறக்கணித்தார்.

“ஆளுநர் பாஜ.வின் ஆதரவாளர். பாஜ அவரை அனைத்து கட்சி கூட்டம் நடத்தும்படி கூறியிருக்கும். எனவேதான், இந்த கூட்டத்தை அவர் நடத்துகிறார். எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் பங்கேற்க மாட்டேன்.  காரணம், சட்டம் ஒழுங்கு என்பது மாநில விவகாரம். இது ஆளுநரின் பொறுப்பு கிடையாது,” என்றார்.

எய்ம்சில் நூதன ஆதரவு:

மேற்கு வங்கத்தில் நடக்கும் வேலை நிறுத்தம் செய்து வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் நேற்று பணியை புறக்கணித்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தங்கள் தலையில் காயத்துக்கு கட்டுப்போட்டபடி போராட்டம் நடத்தியது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Related Stories: