பேஸ்புக்கில் ஆபாச பதிவால் விரக்தி கல்லூரி மாணவி தற்கொலை காதலனும் தூக்கிட்டு சாவு

நெய்வேலி: நெய்வேலி அருகே பேஸ்புக்கில் ஆபாச பதிவால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்க்க வந்த அவரது காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த குறவன்குப்பம் கிரமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மகள் ராதிகா (19). கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமுகத்தை சேர்ந்தவர் பன்னீர் மகன் பிரேம்குமார் (20). இவர் பேஸ்புக்கில் ஆபாச வார்த்தைகளை பதிவு செய்து ராதிகாவிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராதிகா பதிலுக்கு திட்டி பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

இந்த பதிவை படித்த பிரேம்குமாரின் உறவினர்கள், ராதிகா வீட்டிற்கு வந்து பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு தரப்பு குடும்பத்தினர் பிள்ளைகளை கண்டித்து கொள்வதென பேசி கலைத்து சென்றனர். இதனிடையே முகநூல் பதிவால் மனவேதனை அடைந்த ராதிகா கடந்த ஞாயிறன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகாவின் உறவினர்கள் முகநூலில் ஆபாச பதிவிட்ட பிரேம்குமாரின் வீட்டை சூறையாடினர்.

இந்நிலையில் ராதிகா தற்கொலை செய்துகொண்டதை அறிந்த அவரது அத்தை மகனும், காதலனுமான வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ்(23) ராதிகாவை பார்க்க வந்தார். அப்போது உயிரிழந்த ராதிகாவை பார்க்க மனமின்றி வீனங்கேணி அடுத்துள்ள செங்கால்பாளையத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மந்தாரக்குப்பம் போலீசார் ராதிகாவின் உடலை மீட்டு கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கும், விக்னேஷ் உடலை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கும் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட பிரேம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முகநூல் பதிவால் காதலர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறவன்குப்பம் மற்றும் பார்வதிபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராதிகாவின் உறவினர்கள் விருத்தாசலம்-கடலூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

Related Stories: