தமிழகத்தில் பல்வேறு குடிநீர் விநியோக திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோரிக்கை

புதுடெல்லி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவில், தமிழகத்தில் பல்வேறு குடிநீர் விநியோக திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்குமாறு அமைச்சர்  கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூடுதல் தலைமைச் செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளருமான ஹன்ஸ்ராஜ்வர்மா, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்த மாநாட்டில் தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 1600 கிராமங்களில் குடிநீர் திட்டத்தை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட நகராட்சிகளுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க நிதி கோரிக்கை வைத்துள்ளார். உள்ளாட்சித்துறை மூலமாக வறட்சி நிவாரணம் மேற்கொள்ள ரூ.448 கோடி வழங்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி தேவைபடுவதாகவும், குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குடிநீர் திட்டங்களை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் காவிரி நதியிலிருந்து 2,452 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த ரூ.1,800 கோடி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அமைச்சர் தங்கமணியும் உடன் சென்று அமித் ஷாவை சந்தித்துள்ளார்.

Related Stories: