அதிகாரிகள் கொர்ர்ர்...வாகன நெரிசலில் தவிக்கும் சோழவந்தான் சன்னதி வீதி: ஒரு வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை

சோழவந்தான்: சோழவந்தான் சன்னதி வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஒரு வழிப்பாதையை நடைமுறைப் படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  மதுரை மாவட்டம்,மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சன்னதி வீதி வழியாக மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், குருவித்துறை, மன்னாடிமங்கலம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இருபுறமிருந்தும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு தேவைகளுக்கு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இதனால் மதுரை சாலையிலிருந்து வரும் வாகனங்களும், சன்னதி வீதி வழியாக வெளியேறும் வாகனங்களும் சந்திக்கும் சண்முகானந்தா பவன் அருகில் எப்போதும் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் கடந்து செல்ல  நீண்ட நேரம் தாமதமாகும். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர கால ஊர்திகளும் நெரிசலில் சிக்குவதால் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.

இந்த நிலையில், தற்போது விழாவிற்காக பந்தல் அமைத்திருப்பதால் சன்னதி வீதியில் இரு வழித்தட வாகனங்கள்,ஒரே நேரத்தில் செல்ல முடிவதில்லை.எனவே ஒரு வழிப் பாதையை நடைமுறைப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நாளை தொடங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஊர்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். ஏற்கனவே நெரிசலில் சிக்கித் தவிக்கும் சன்னதி வீதியில் மேலும் அதிக நெரிசல் ஏற்படும். எனவே மதுரை சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், மார்க்கட் ரோடு, பஸ் நிலையம், வட்டப்பிள்ளையார் கோவில் வழியாக உரிய ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

சோழவந்தானிலிருந்து வெளியேறும் வாகனங்கள் மட்டும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெனகை மாரியம்மன் சன்னதி வழியாக வெளியேற  வேண்டும். இதற்காக சண்முகானந்தா பவன் அருகிலும், பஸ் நிலையம் அருகிலும் தடுப்புகள் வைத்து, ஒரு போக்குவரத்து காவலரை நிறுத்தி ஒருவழிப் பாதையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையிலிருந்து அதிக சிலிண்டர் லாரிகள், வாடிப்பட்டி நான்கு வழியாக செல்லாமல், சோழவந்தான் வழியாக செல்வதால் தான் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இதையும் திருவிழா முடியும் வரை இவ்வழியே வராமல், நான்கு வழிச்சாலை வழியாக மாற்றி அனுப்பினால் நெரிசல் குறையும். மேலும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும். எனவே காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: