நிபா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கேரள சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசுடன் ஆலோசனை

திருவனந்தபுரம்: மத்திய சுகாதாரத்துறை  அமைச்சருடன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா  டெல்லியில்  ஆலோசனை நடத்தினார். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல்  மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காய்ச்சல் அறிகுறியுடன்  எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ஒருவர் பரிதாபமாக இறந்தார். நிபா வைரசால்தான் அவர் இறந்தாரா? என்பதை  கண்டறியும் வகையில் அவரது ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு  பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சூரைச்  சேர்ந்த கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை  எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனி வார்டில்  அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு தற்போது உடல்நிலை சற்று சீராகி வருகிறது. இந்த மாணவருடன் பழகிய 318 பேரின் உடல் நிலை தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 41 பேர் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் நிபா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேருக்கு நிபா  இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிபா  காய்ச்சல் பரவி வருவதை தடுப்பது குறித்து கேரள  சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நேற்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நோய் தடுப்பு நடவடிக்கைகள்,  மருந்துகளை விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: