அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரியும் 594 இந்தியர்களின் நிறுத்திய ஊதியத்தை வழங்க ஒப்புதல்

புதுடெல்லி: அமெரிக்காவில், எச்1பி விசாவில் பணியாற்றிய 594 இந்திய ஊழியர்களுக்கு, நிறுவன விடுமுறை காலத்தில் வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க அந்நாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில், விடுமுறை போன்ற தினங்களிலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், மிச்சிகனில் இயங்கி வரும் பாப்புலஸ் குரூப் நிறுவனம், விடுமுறைக் காலத்தில் நிறுவனம் மூடப்பட்டிருந்தபோது, எச்1பி விசாவில் பணிக்கு சேர்ந்திருந்த 594 ஊழியர்கள் உட்பட 600 பேருக்கு தர வேண்டிய ஊதியத்தை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்க தொழிலாளர் ஊதியம் மற்றும் பணி நேரப் பிரிவுத் துறை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. விசாரணையில் மேற்கண்ட நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ‘‘எச்1பி விசாவில் பணிபுரியும் 594 இந்தியர்கள் உட்பட 600 பேருக்கு, நிறுவனம் மூடப்பட்டிருந்த காலத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும்’’ என உத்தரவில் தெரிவித்தது. இதையடுத்து, மேற்கண்ட நிலுவை தொகை மொத்தம் 1.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7.59 கோடி) வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலுவை தொகையை பெறும் இந்தியர்கள் அதிக பணித்திறன் வாய்ந்த ஐடி ஊழியர்கள்.

Related Stories: