தெலங்கானா, கர்நாடகா உட்பட 6 மாநிலங்களில் மருந்து தயாரிப்பு பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு முடிவு

பெங்களூரு: ‘‘கர்நாடகா உள்பட நாட்டில் 6 மாநிலங்களில் மருந்து உற்பத்தி செய்யும் மருத்துவ பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது,’’ என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறினார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு  அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி: உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு, மருந்து மாத்திரைகள் உரிய முறையில் கிடைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் 90 பில்லியன் டாலராக இருக்கும் மருந்து விற்பனையில் இந்தியாவின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. சர்வதேச அளவில் தயாரிக்கப்படும் 5 சதவீத மருந்து மாத்திரைகளில் ஒரு சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. தற்போது, சர்வதேச அளவில் இந்தியாவில் தயாரிக்கும் மருந்து மாத்திரைகளுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. இதனால், நாட்டில் 12 இடங்களில் மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, சட்டீஸ்கர், அரியானா ஆகிய 6 மாநிலங்களில் மருத்துவ பூங்கா அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் அமைய உள்ள மருத்துவப் பூங்காவுக்காக மாநில அரசு 100 ஏக்கர் நிலம் ஒதுக்குவதுடன், சேவை வரியை ரத்து செய்யவும் முன்வந்துள்ளது.  இதேபோல், பிற மாநிலங்களில் மருத்துவ பூங்கா அமைப்பது தொடர்பாக அம்மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: