மாநிலங்களவையில் காலாவதி ஆனதால் முத்தலாக் தடை விதிக்க விரைவில் மசோதா: மத்திய சட்ட அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ‘‘முத்தலாக் விவாகரத்து நடைமுறையை தடை செய்ய, நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்,’’ என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வதை தடை செய்யும் மசோதா, கடந்த மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது. பின்னர், அது மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.

அங்கு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 16வது மக்களவையின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்ததால், மசோதாவும் காலாவதியாகி விட்டது.மாநிலங்களவையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கும்போது, மக்களவை கலைக்கப்பட்டால், அந்த மசோதா காலாவதி ஆகாது. அதேவேளையில், மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தால், அது காலாவதியாகி விடும்.

மாநிலங்களவையில் பாஜ அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால்,  இந்த மசோதாவை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், முத்தலாக் தடை மசோதா புதிய மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும். பாஜ.வின் தேர்தல் அறிக்கையில் அது வாக்குறுதியாக தரப்பட்டது. இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற ரவிசங்கர் பிரசாத்திடம் இந்த மசோதா பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வருவதற்கு மக்களவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்,’’ என்றார்.

5ஜி அலைக்கற்றை ஏலம் விட முடிவு:

சட்டத் துறை மட்டுமின்றி, தகவல் தொடர்புத் துறை அமைச்சராகவும் ரவிசங்கர் பிரசாத் பொறுப்பேற்று உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘நடப்பு நிதியாண்டில், 5ஜி அலைக்கற்றை, வானொலி அலைவரிசை ஆகியவற்றிற்கு பெரும் ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நலிவடைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை சீரமைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்,’’ என்றார்.

சட்ட அமைச்சகமா? அஞ்சல் அலுவலகமா?

நீதிபதிகள் நியமனம் பற்றி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘நீதித்துறை நியமனங்களில் நானோ, எனது அமைச்சகமோ அஞ்சல் அலுவலகம் போல் இருக்க முடியாது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்துடன்  ஆலோசனை நடத்தும் முக்கிய பொறுப்பும் உள்ளது. நீதிபதிகள் நியமனம் செய்யும் முறையில் கொலிஜியம் முறைக்கு சட்ட அமைச்சர், சட்ட அமைச்சகம் ஆகியவை உரிய முக்கியத்துவம் அளிக்கும்,’’ என்றார்.

Related Stories: