சியாச்சின் சென்றார் ராஜ்நாத் நாட்டிற்கு சேவையாற்ற வீரர்களை அனுப்பிய பெற்றோர்களுக்கு நன்றி: டிவிட்டரில் உருக்கம்

ஸ்ரீநகர்: பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், சியாச்சின் ராணுவ முகாமிற்கு சென்ற ராஜ்நாத் சிங், நாட்டிற்கு சேவையாற்ற அவர்களை அனுப்பிய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். கடந்த மாதம் 23ம் தேதி பிரதமர் மோடியுடன் சேர்த்து அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களில் அவர்கள் பொறுப்பேற்று வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங், உலகின் உயரமான போர்க்களம் என்று குறிப்பிடப்படும் சியாச்சின் ராணுவ முகாமிற்கு நேற்று சென்றார். அங்கு அவர் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மிக மோசமான நிலபரப்பை சியாச்சினில் கூட தைரியத்துடனும், மனோபலத்துடனும் நமது வீரர்கள் தங்கள் கடமையை திறம்பட செய்து வருகிறார்கள்.

அவர்களுடைய வீரத்திற்கும், தீரத்திற்கும் தலை வணங்குகிறேன். தாய் நாட்டை காக்க சியாச்சினில் சேவை புரியும் ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் எண்ணி பெருமைப்படுகிறேன். ராணுவத்தில் இணைந்து நாட்டிற்காக சேவையாற்ற அவர்களை அனுப்பி வைத்த அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சியாச்சின் பனிமலையைக் காக்கும் பணியில் ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் தியாகத்திற்கும் சேவைக்கும் நாடு என்றும் கடமைப்பட்டு உள்ளது’ என கூறியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 12 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இங்கு பனிச்சரிவும், நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கம். குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கூட சென்று விடும்.

Related Stories: