10 செடி நடு; ஒரு செல்பி எடு இந்தா... பிடி துப்பாக்கி! ம.பி. கலெக்டர் அசத்தல்

குவாலியர்: ‘‘துப்பாக்கி லைசென்ஸ் வேணும்னா, குறைந்தபட்சம் 10 மரக்கன்று நட்டு, அதை ஒரு மாசம் வளர்த்து, அதோட செல்பி எடுத்து விண்ணப்பிக்கணும்’’ என அசத்தலான உத்தரவிட்டு அனைவரின் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்துள்ளார் மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்ட கலெக்டர் அனுராக் சவுத்ரி. பல்வேறு தேவைக்காகவும், வசதிக்காகவும் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதால், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் வெப்பநிலை 45-50 டிகிரி செல்சியசை தொட்டு, சுட்டெரிக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரங்கள் நடுவதை ஊக்குவிக்க மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்ட கலெக்டர் அனுராக் சவுத்ரி வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ‘துப்பாக்கி லைசென்ஸ் வேணும்னா, 10 மரத்தை வளர்த்து காட்டுன்னு’ குண்டை தூக்கி போட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10 மரக்கன்று நட வேண்டும். அதற்கான சொந்த இடம் இல்லாதவர்கள், உள்ளாட்சி நிர்வாகத்தின் குறிப்பிட்ட இடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மரக்கன்று நடுவதோடு நின்றுவிடக் கூடாது. அதை தண்ணீர் ஊற்றி ஒரு மாதம் பராமரிக்க வேண்டும்.

பின்னர், அந்த மரக்கன்றுடன் செல்போனில் செல்பி எடுத்து, அந்த புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் மரக்கன்றை ஆய்வு செய்த பிறகு துப்பாக்கி லைசென்ஸ் தருவார்கள்’’ என்றார். உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இருக்கிறது என்ற விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்குண்டு. அவர்களும், லைசென்ஸ் பெற்ற பிறகு மரக்கன்றை நட்டு வளர்த்து காட்ட வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மரங்களை பாதுகாக்க இதுவும் ஒரு நல்ல முயற்சி தானே!

இது மட்டுமில்ல இன்னும் இருக்கு:

கலெக்டர் அனுராக் கூறுகையில், ‘‘துப்பாக்கி லைசென்சுக்கு மட்டுமல்ல, மற்ற அனுமதிகளுக்கும் இதே திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிட்டு இருக்கோம். அதாவது, பெட்ரோல் பங்க், கிரசர் போன்றவைகளுக்கு அனுமதி தர மரக்கன்று நடுவதை கட்டாயமாக்க யோசித்து வருகிறோம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும்’’ என்கிறார்.

Related Stories: