கோயம்பேடு மார்க்கெட் கடைகளை ஏலம் விடுவதற்கு தடை கோரி வழக்கு : சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் கடைகளை ஏலம் விட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சிஎம்டிஏ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்பட்டது. அதில், சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டதால், அங்கு மொத்த வியாபாரம் செய்து வந்த பூ, பழம், காய்கறி வியாபாரிகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அரசு மாற்றியது. இந்த வியாபாரிகளுக்கு  ஒரு சதுர அடி ரூ.375 வீதம் வாடகை நிர்ணயம் செய்து கடைகள் வழங்கப்பட்டது. பிற வியாபாரிகளுக்கு ஒரு சதுர அடி ரூ.450 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் இருந்து அனைத்து வியாபாரிகளையும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) இதுபோன்ற சலுகை வழங்கியது.

ஆனால் தற்போது, கோயம்பேடு மார்க்கெட்டில் காலியாக உள்ள கடைகளை மொத்த வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு கடைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் விண்ணப்பித்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி அதிக வாடகையை நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சிஎம்டிஏ வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில், ஒரு சதுர அடிக்கு ரூ.18,750 என்று வாடகை நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏற்கனவே ரூ.8 ஆயிரத்து 446 தான் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கும் அரசின் கொள்கைக்கு எதிராக உள்ளது. இந்த விதிமுறை மீறல் குறித்து ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை.

எனவே அதிக வாடகை நிர்ணயம் செய்து ஏலம் விட உள்ள சிஎம்டிஏ முடிவுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தோம். ஆனால், தனி நீதிபதி தடை விதிக்க மறுத்து விட்டார். எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, கடைகளை ஏலம் விட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வருகிற 6ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சிஎம்டிஏவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories: