பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் ரயிலை தகர்க்க சதி? : தண்டவாளத்தில் வெடிகுண்டு இருந்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலைய பிளாட்பாரம் எண் ஒன்றில் தண்டவாளம்  அருகே ெவடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்  பிடித்தனர். பெங்களூரு  சிட்டி  ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து  செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை 8.45 மணி அளவில், மைசூருவில்  இருந்து ஒரு ரயில் வந்து நின்றது. அதிலிருந்து கிருஷ்ணா என்ற போலீஸ்காரர்  இறங்கினார். பின்னர், போலீஸ் நிலையம் செல்ல 5வது பிளாட்பாரத்தில் இருந்து  முதலாவது பிளாட்பாரத்திற்கு சென்றார்.

அப்போது பிளாட் பாரம் எண்  ஒன்றில் தண்டவாளம் அருகில் சந்தேகம் எழும் வகையில் வெடிகுண்டு போல  ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்  இது குறித்து ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

போலீசார்  விரைந்து வந்து டெட்டனேட்டர்கள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த  தகவல் ரயில் நிலையம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

அதைக்கேட்டதும்  ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடத்  தொடங்கினர். வெடிகுண்டு நிபுணர்கள்  ஆராய்ந்ததில், அது வெடிபொருள் இல்லாத வெத்து டெட்டனேட்டர் என்று தெரியவந்தது. இருந்தாலும் அனைத்து ரயில் நிலைய பிளாட்பாரங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதாக புறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: