திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரபரப்பு அறங்காவலர் குழு கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் பங்கேற்காமல் அதிகாரிகள் புறக்கணித்தனர். மேலும் இதில் 2 உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில் தலைவர் பதவியை தானாக ராஜினாமா செய்ய மாட்டேன் என சுதாகர் யாதவ் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் 21  உறுப்பினர்களுடன் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம்  நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், தெலுங்கு தேசம் ஆட்சியின்  போது அமைக்கப்பட்ட அறங்காவலர் குழு என்பதால்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறங்காவலர் குழுவில் உள்ள அனைவரும் தங்கள் பதவிக்கு  உண்டான தகுதியை இழந்து உள்ளனர். எனவே தாங்களாக ராஜினாமா செய்து செல்ல வேண்டும். அதுவரை அறங்காவலர் குழு கூட்டத்தை நடத்த கூடாது. அப்படி நடைபெற்றால் அதில் அதிகாரிகள் பங்கேற்க கூடாது என தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுதாகர் யாதவ் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7 அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மட்டும் வந்திருந்த நிலையில் தலைவர் சுதாகர் யாதவ், தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால்,  இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் கூட்டம் தொடங்கி இறைவழிபாடு செய்தனர். பின்னர் சில நிமிடங்களிலேயே கூட்டத்தை விட்டு செயல் அலுவலரும், இணை செயல் அலுவலரும்  வெளியேறினர். இதையடுத்து அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அதிகாரிகள் வருகைக்காக சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து தாங்களும் செய்வதறியாமல் கூட்டத்தை விட்டு வெளியே வந்தனர்.  அடுத்தடுத்து அதிகாரிகளும், அறங்காவலர் குழுவினரும் வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சுதாகர் யாதவ் கூறுகையில், ‘‘ஆந்திராவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் கடவுளுக்கு செய்யும் சேவையில் இருந்து நானாக ராஜினாமா செய்து விலகி செல்ல மாட்டேன். எனவே புதிய அரசு வந்தவுடன் அவர்கள் அறிவிக்கும் முடிவை பொறுத்து நான் விலகி செல்வேன். அதுவரை தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவராக நீடிப்பேன்’’ என்றார்.

Related Stories: