வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவு பாதிப்பை ஆராய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எண்ணுர் அருகே தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் வடசென்னை அனல் மின் நிலையம், பக்கிங்ஹாம் கொசஸ்தலை ஆற்றில் சாம்பலை கொட்டி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க கோரி சென்னையை சேர்ந்த ரவிமாறன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதிபதி ராமகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் நக்கினந்தா கொண்ட அமர்வு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐஐடி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.  

இந்த குழு வடசென்னை அனல்மின் நிலையத்தை நேரில் பார்வையிட்டு சாம்பல் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன, சாம்பல் கழிவுகளை ஆற்றில் கொட்டியதால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? வட சென்னை அனல்மின் நிலைய நிர்வாகம் எந்தெந்த சட்ட விதிகளை மீறியுள்ளது, வட சென்னை அனல்மின் நிலைய நிர்வாகம் செய்த தவறுகளுக்கு எவ்வளவு இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பது என்று ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிபுணர்குழு மேற்கொள்ளும் ஆய்விற்காகும் செலவை வட சென்னை அனல்மின் நிலைய நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தேவைப் பட்டால் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூடுதலாக நிபுணர் ஒருவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  

Related Stories: