வேலூர் அடுத்த ஒடுகத்தூர் அருகே குடியிருக்க நிலத்தை வழங்கியவருக்கு கோயில் கட்டி கும்பிடும் பொதுமக்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பொதுமக்களுக்கு நிலங்களை வழங்கியவருக்கு ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கோயில் கட்டி வழிபாடு செய்வதுடன், அவரது பெயரில் அன்னதானமும் செய்து வருகின்றனர். ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையத்தை சேர்ந்தவர் தர்மம் கொண்ட ராஜா. இவர் கி.பி.18ம் நூற்றாண்டில் இங்கு சிறந்த ஆன்மிகவாதியாக வாழ்ந்தவர். இவர் தனது பகுதியில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் பல அதிசயங்களை நிகழ்த்தியவர். பல ஊர்களிலும் தனக்கு சொந்தமான நிலங்களை அரசுக்கும், மக்களுக்கும் தானமாக வழங்கியவர். அத்தகைய ஒருவரை கடவுளாக கருதி வழிபடுகின்றனர் 5 கிராமங்களை சேர்ந்த மக்கள். இதுகுறித்து அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது: தர்மம் கொண்ட ராஜா இப்பகுதியில் சிறந்த ஆன்மிகவாதியாக விளங்கியவர். இவர் குளம் வெட்டும் பகுதிகளில் கிடைக்கும் தண்ணீர் உப்புத்தன்மையில்லாமல் நல்ல தண்ணீராகவே கிடைப்பது குறித்து அன்று ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை அழைத்து ஆங்கிலேயர்கள் சென்னை தங்க சாலை பகுதியில் கிணறுகள் அமைக்க இடங்களை தேர்வு செய்ய கேட்டனர். அதற்கு ராஜா, மின்ட் பகுதிகளில் ஏழு கிணறுகள் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தார். அந்த கிணறுகளில் தற்போதும் நீரூற்று உள்ளதாகவும், அது நல்ல குடிநீராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஆந்திர மாநிலம் சித்தூர் பல்லவனேரி என்ற பலமனேர் பெரிய ஏரி நீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உவர்ப்புத்தன்மையுடன் இருந்ததாம். இங்கும் தர்மம் கொண்ட ராஜாவை அழைத்து வந்த ஆங்கிலேயர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். பூஜை செய்து தண்ணீரில் பிரசாதம் தூவிய போது அவை மீன்களாக மாறி மூன்று மணி நேரத்தில் அந்த அந்த ஏரியில் உள்ள கிருமிகளை மீன்கள் உண்டு, ஏரி நீரை குடிநீராக மாற்றியது. இச்சம்பவம் ஆங்கிலேயர்களை ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் அவருக்கு இரண்டு முதல் ஐந்து ஏக்கர் நிலம் வரை பரிசாக வழங்கியுள்ளனர். அதோடு அவருக்கு சென்னை மற்றும் வேலூரிலும், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிலங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. பறவைகள் மீது அதிகமான பற்று கொண்ட இவர். தனது சகோதரருடன் சேர்ந்து சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வந்தார். அப்போது அவரது சகோதரர் பயிர்களை பறவைகள் நெருங்காத வகையில் விரட்டியுள்ளார். ஆனால் தர்மம் கொண்ட ராஜாவோ பயிர்களுக்கு இடையே பறவைகளுக்கு குடிநீர் வசதி செய்து தந்துள்ளார். இதனால் ராஜாவின் சகோதரரை விட 3 சதவீதம் கூடுதல் மகசூல் இவருக்கு கிடைத்தது.

இதற்கிடையில் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மலைப்பகுதியில் திருமலைகுப்பம் பாலப்பாடி செல்லும் வழியில் கடந்த 1920ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் 2 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டவும், அங்கு சென்று வரவும் அனுமதி வழங்கியுள்ளனர். அந்த நிலத்தில் பெருமாள் கோயில் கட்டுவதற்காக குளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். குளம் வெட்டும் பணியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டனர். அவர்களுக்கான ஊதியத்தை அங்குள்ள ஒரு கொட்டகையில் தானியம், பணம் ஆகியவற்றுடன் வைத்துவிட்டு, பணியில் ஈடுபட்டவர்களிடம், ‘உங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியத்தை இங்கு தானியமாகவும், பணமாகவும் எடுத்துச் செல்லலாம்’ என்று அறிவித்துள்ளார். ஆனால் தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தை எடுக்காமல் அதிகமாக எடுத்துச் செல்வார்களாம். அப்படி எடுத்து சென்றாலும், அவர்களது உழைப்புக்கான ஊதியம் அல்லது தானியம் மட்டுமே வீடு போய் சேரும்போது இருக்குமாம். இந்நிலையில், ஒரு நாள் கோயில் குளம் வெட்டும் பகுதிக்கு வந்த 7 திருடர்கள் குளம் வெட்டுபவர்களின் ஊதியத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். அவ்வாறு திருடிச் சென்ற பணத்தை பங்கிடும் போது அவர்கள் 7 பேருக்கும் கண் பார்வை பறிபோயுள்ளது. இதனால் அவர்கள் 7 பேரும் தர்மம் கொண்ட ராஜாவிடம் சென்று, ‘நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கூறி கதறினர்.

அதற்கு ராஜா, ‘தவறை உணர்ந்து விட்டதால், நாளை கண் பார்வை மீளும்’ என்று கூறிவிட்டு சென்றாராம். அதற்கேற்ப மறுநாள் 7 பேருக்கும் கண் பார்வை மீண்டுள்ளது. இதையடுத்து அவர்களும் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டார்களாம். இக்கோயிலில்  அமைக்கப்பட்டுள்ள குளம் எந்த காலத்திலும் வற்றியது இல்லையாம். தற்போதும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கிறார்கள. ஆங்கிலேயர் காலத்தில் தர்மம் கொண்ட ராஜா அமைத்த கோயிலுக்கு செல்ல மலைப்பாதையில் 30 அடி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வந்து வணங்கும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுகிறது. இந்த கோயிலில் பெருமாளுக்கு உருவச்சிலை இல்லாமல் ஒரு கல் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தர்மம் கொண்ட ராஜாவின் உருவப்படமும் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. பெருமாள் பக்தர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும், இவரால் பயனடைந்த ஆறு கிராமங்களை சேர்ந்த மக்களும் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குகின்றனர். அப்போது தங்களுக்கு வசிக்க நிலம் தந்த தர்மம் கொண்ட ராஜாவுக்கும் வழிபாடு நடத்தி நன்றியை செலுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இவருக்கு ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட இடங்கள் ஏழைகள் பலருக்கு இவரால் வழங்கப்பட்டு தற்போது அங்கெல்லாம் அவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் பல இடங்கள் அரசாங்க பொதுகாரியங்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோயிலுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், இப்பகுதிக்கு வந்து செல்ல சாலை வசதியை வனத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: