கொளுத்துது கோடை வெயில் கூலிங் பீர் குடிக்க குவியும் ‘குடிமகன்கள்’

* டாஸ்மாக் கடைகள் ஹவுஸ்புல்

* பாட்டிலுக்கு ரூ.20 வரை அதிகரிப்பு

மதுரை : கோடை வெயில் கொளுத்துவதால் டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் குடிக்க கூட்டம் அலை மோதுகிறது. இதனால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது. கடந்த ேம 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பகலில் அனல் காற்று வீசுகிறது. மக்கள் உடல் சூட்டை தணிக்க சர்பத், தர்பூசணி ஜூஸ், பழ ரசங்களை வாங்கி குடித்து வருகின்றனர். ‘குடிமகன்களோ’ கூலிங் பீர் வாங்கி குடித்து, ‘உடல் சூட்டை’ தணித்துக் கொள்வதற்காக டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் வாங்க மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதுகிறது. சராசரியாக 50 பீர் பாட்டில்கள் விற்ற கடையில், 100 பீர் பாட்டில்கள் வரை விற்பனையாகிறது. அதாவது ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் வரை பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் 650 மில்லி கொண்ட பீர் பாட்டிலை, ஏற்கனவே இருக்கும் கம்பெனிகளின் பெயர்களில் சில மாற்றம் செய்து விலையை அதிகரித்துள்ளனர். உதாரணத்திற்கு, அல்ட்ரா பிரீமியம் பிராண்ட் பீர், சூப்பர் ஸ்டார் பிரீமியம் என பெயர் மாற்றி விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.110 விலை உள்ள பீர் பாட்டில் ரூ.120க்கும், ரூ.120 விலை உள்ள பீர் பாட்டில் ரூ.140க்கும் விற்பனையாகிறது. இம்மாதத்தில் மட்டும் பீர் விலை ரூ.10ல் இருந்து ரூ.20 வரை அதிகரித்துள்ளது. இதனால் ‘குடிமகன்கள்’ பெரும் அதிர்ச்சிக்குள்ளானாலும், கடைகளில் பீர் வாங்குபவர்களின் கூட்டம் குறையவில்லை. இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்டபோது, “பீர் பாட்டில் விலையை டாஸ்மாக் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி கூட்டியுள்ளது. மேலும் பீர் பாட்டில் விலை பட்டியலும் தரவில்லை. இதனால் கடைக்கு சரக்கு வாங்க வருபவர்களுடன் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது” என்றனர்.

Related Stories: