தமிழகத்தில் முதன்முறையாக இளைஞர்-திருநங்கை திருமணம் ஐகோர்ட் உத்தரவுப்படி பதிவு: சான்றிதழ் பெற்றதால் மகிழ்ச்சி

தூத்துக்குடி:  தூத்துக்குடி தாய் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (22). இவரும் தூத்துக்குடி - எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஜா (20) என்ற திருநங்கையும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி சிவன் கோயிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் சான்றிதழ்களை பார்த்த கோயில் அதிகாரிகள், ஜாவை திருநங்கை என பதிவு செய்ய இயலாது என்று தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருநங்கை ஜா- அருண்குமார் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று அருண்குமார் - ஜா ஆகியோர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து தரக்கோரி விண்ணப்பித்தனர். தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதும் அவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து திருநங்கை ஜா-அருண் கூறியதாவது: ‘பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எங்களது உரிமையை நிலை நாட்டியுள்ளோம். தற்போது எங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து அதற்கான சான்றிதழை வாங்கி உள்ளோம். தமிழகத்தில் எங்கள் திருமணம் முதல் முறையாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது’ என்றனர். தொடர்ந்து நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் மாலை மற்றும் மோதிரம் மாற்றி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Related Stories: