தர்மபுரி மாரண்டஅள்ளியில் வறட்சி 5 லட்சம் தென்னை பாக்கு மரங்கள் காய்ந்தன

பாலக்கோடு: மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை, பாக்கு மரங்கள் முற்றிலும் காய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் செழிப்பான பகுதியாக இருந்த மாரண்டஅள்ளி மற்றும் சாமனூர், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, பாக்கு, பலா, வாழை, மா உள்ளிட்ட மரங்கள் நன்கு விளைந்து நல்ல அறுவடையை கொடுத்தன. தற்போது மழையின்மை மற்றும் வறட்சியால், செழித்திருந்த மரங்கள் அனைத்தும் காய்ந்து போனதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்ட தென்னை, பாக்கு மரங்கள் முற்றிலும் காய்ந்து கருகி மொட்டையாகி காட்சி அளிக்கிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது நிலவி வரும் வறட்சியால், தென்னை மற்றும் பாக்கு மரங்கள் காய்ந்து வருகிறது. எனவே, விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, கடந்த காலங்களில் இருந்தது போல் தென்னை, பாக்குமரங்களை பயிரிட அரசு மரக்கன்றுகளை கொடுத்து உதவ வேண்டும். மேலும், நீண்ட நாள் கோரிக்கையான தூள்செட்டி ஏரி திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, எஞ்சியிருக்கும் பயிர்களையாவது பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: