கொருக்குப்பேட்டையில் நள்ளிரவு அதிரடி: ரவுடிகளை தீர்த்துக்கட்ட வீட்டில் பதுங்கி இருந்த 7 பேர் கும்பல் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர் வீட்டு வசதி வாரிய பகுதியில் ஆயுதங்களுடன் கும்பல் பதுங்கியிருப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தி ஒரு வீட்டில் பதுங்கி  இருந்த 7 பேர் கும்பலை சுற்றி வளைத்து, பிடித்து விசாரித்தனர். அவர்கள், கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர் கருப்பு (எ) பிரபாகரன் (38), ஆகாஷ் (20), விக்னேஷ் (24), அஜித் (20), சிங்கம் (எ) பிரேம்குமார் (26), கதிர் (24), ராஜேஷ் (25) என தெரிந்தது. இதுபோல் எதிர் கோஷ்டியை சேர்ந்த ரவுடி கோட்டீஸ்வரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரு கோஷ்டியிடம் நடத்திய விசாரணையில், ரவுடி கோட்டீஸ்வரனுக்கும், மற்றொரு ரவுடி பிரபாகரனுக்கும் யார் பெரியவர் என்பதில் மோதல் இருந்துள்ளது. பிரபாகரனை கொலை செய்ய கோட்டீஸ்வரன் திட்டம் தீட்டியுள்ளார். இதையறிந்த பிரபாகரன், கோட்டீஸ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கியிருந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 6 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஆனந்த் ராஜூக்கு, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் கலைச்செல்வன் பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே இது தொடர்பாக  கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ரவுடிகள் பரத் (19), விக்னேஷ் (19), பாலாஜி (18) ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* அரும்பாக்கம் ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அழகப்பன் (44). நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகில் சவாரிக்கு நின்றபோது வலிப்பு ஏற்பட்டு துடித்தார். சக நண்பர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதில் வந்த மருத்துவர் அழகப்பனை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரிந்தது.

* அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. வில்லிவாக்கம், பாட்டை சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை 3 பேர் இவரது கடையை உடைத்துள்ளனர். தடுக்க முயன்ற எதிர் வீட்டுக்காரர் மீரானை பட்டாக்கத்தியால் தாக்கிவிட்டு பைக்கில் தப்பிவிட்டனர். முஸ்தபா கடையை திறந்தபோது ரூ.7 லட்சம் செல்போன்கள், ரூ.97 ஆயிரம் பனம் கொள்ளை போனது தெரிந்தது. புகாரின்பேரில் ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (43). நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது 2 பேர் செயினை பறிக்க முயன்றனர். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை பிடித்து விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், எம்ஜிஆர் நகர் பகுதியை தினேஷ், சரத்குமார் என தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

* கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் அப்துல்லா (39). நேற்று ஆலப்பாக்கம், ராமதாஸ் சாலையில் பைக்கில் வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென பைக் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

* சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி,  திருவொற்றியூர், சின்ன மேட்டுப்பாளையம் அகில் (24), கணேஷ் (24), திருவொற்றியூர் அம்சா கார்டன் தெரு கார்த்திக் (எ) கேட் கார்த்திக் (23), புளியந்தோப்பு, குருசாமி தெரு ரூபன் (31), வியாசர்பாடி எம்.பி.எம் தெரு, சஞ்சய்நகர் ஜெகன் (எ) கருப்பு (31), பட்டாபிராம், தண்டுரை, பள்ள தெரு சுரேஷ் (எ) பில்லா (23) ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

* வண்ணாரப்பேட்டை போலீசார் கண்ணன் ரவுண்டானா அருகே வாகன சோதனை நடத்தி ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தி வந்த கொருக்குப்பேட்டை அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த கோபி (37) என்பவரை கைது செய்தனர். மேலும் 336 மதுபாட்டில், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: