ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது

தைபே: ஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமண செய்வதற்கு தைவான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 24ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. தற்போதைய நவீன உலகில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில்  ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் ஏற்கனவே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடான தைவானிலும் ஓரின சேர்க்கையாளர்கள் பெருமளவில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் அங்கும் புற்றீசல் போல் ஓரின சேர்க்கையாளர்களின் சங்கங்கள், அமைப்புகள் பல தோன்றி அவர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் பேரணி நடத்தி வருகின்றனர்.

`ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்காதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்’ என்று கடந்த 2017ம் ஆண்டு அரசை எச்சரித்த தைவான் உச்ச நீதிமன்றம் அதனை அங்கீகரிக்க அறிவுறுத்தியது. இந்நிலையில் தைவான் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பின் போது ஓரின சேர்க்கையாளர்களின் திருமண மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்றத்தின் வெளியே கூடியிருந்த ஓரின சேர்க்கையாளர்கள் கூறுகையில், ``சாதாரண கணவன்-மனைவி போல் வாழ்வதற்கு எங்களுக்கு சட்டம் வகை செய்துள்ளது. இதன் மூலம் சமநிலை நிலைநாட்டப்பட்டு உள்ளது. நாங்களும் தம்பதியர்கள் போன்று திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். வாடகைத் தாய், குழந்தை தத்தெடுப்பது என்று வரும் போது சட்டப்படி சில சமரசங்கள் செய்து கொள்ள தயாராக இருக்கிறோம்,’’ என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தைவான் அதிபர் சாய் இங் வென் பேசிய போது, ``இது உண்மையான சமநிலையை ஏற்படுத்துவதற்கான பெரும் முயற்சியாகும். இதன் மூலம், தைவான் ஒரு சிறந்த நாடாக விளங்கும்,’’ என்று கூறினார்.

Related Stories: