திறமை அடிப்படையில் கிரீன் கார்டு தரும் எண்ணிக்கையை 57 சதவீதமாக உயர்த்தினார் டிரம்ப் : இந்தியர்களுக்கு அதிக பயன் கிடைக்கும்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரில் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் கிரீன் கார்டு எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 11 லட்சம் பேருக்கு ஆண்டு தோறும் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம், திறன் அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது.  இந்த முறையை மாற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்த புதிய குடியுரிமை கொள்கையில், திறமையானவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவது 12 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் தற்போது இருக்கும் குடியுரிமை கொள்கை, உலகம் முழுவதும் உள்ள திமையானவர்களை கவரவில்லை. அதனால், தகுதி அடிப்படையில் நிரந்தர குடியுரிமை வழங்கும் முறையை கொண்டு வர விரும்பினேன். வயது, அறிவு, வேலைவாய்ப்பு, பொது அறிவு, ஆங்கில திறன் தேர்வு தேர்ச்சி போன்றவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும். தற்போதுள்ள முட்டாள்தனமான விதிமுறைகளால், டாக்டர், ஆராய்ச்சியாளர், உலகின் சிறந்த கல்லூரியின் முதல் ரேங்க் மாணவர் போன்றவர்களுக்கு எங்களால் முன்னுரிமை அளிக்க முடியவில்லை. தற்போதுள்ள குடியுரிமை விதிமுறைகளின்படி திறமை குறைந்தவர்களுக்கு, குறைந்த சம்பளம் வாங்குபவர்களுக்கு எல்லாம் கிரீன் கார்டு கிடைக்கிறது. இதன் மூலம், அமெரிக்க தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், திறமை வாய்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் அளவை 12 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமக உயர்த்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த புதிய நடைமுறை, எச்-1பி விசாவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கு விரைவில் நிரந்தர குடியுரிமை பெற வாய்ப்பளிக்கும்.

இந்தியருக்கு விசா வழங்க மறுப்பு அமெரிக்க அரசு மீது ஐ.டி நிறுவனம் வழக்கு

அமெரிக்காவின் சிலிகான் வேலி பகுதியைச் சேர்ந்த ஐ.டி நிறுவனம் ‘எக்ஸ்ட்ரா சொல்யூசன்ஸ்’. இந்த நிறுவனம் பிரகாஷ் சந்திரா சாய் வெங்கட அனிஷெட்டி என்ற இந்தியரை ‘பிசினஸ் சிஸ்டம் ஆய்வு நிபுணராக’ பணி அமர்த்துவதற்காக எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தது. ஆனால், இந்த விண்ணப்பத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் சேவைகள் துறை நிராகரித்து விட்டது. எச்-1பி சிறப்பு வேலைப்பிரிவின் கீழ் இந்த வேலை வராததால் பிரகாஷ் சந்திராவுக்கு எச்-1பி விசா மறுக்கப்படுகிறது என காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்க அரசு மீது அந்த நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

கமலா ஹாரிஸ் எதிர்ப்பு

அதிபர் டிரம்பின் புதிய குடியுரிமை கொள்கையை எதிர்த்து போராட போவதாக எதிர்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி செனட் உறுப்பினரான கமலா ஹாரிஸ், இந்த புதிய குடியுரிமை கொள்கையை விமர்சித்துள்ளார். கலிபோர்னியா பகுதியின் ஜனநாயக கட்சி செனட் உறுப்பினரான இவர் கூறுகையில், ‘‘ஒன்றுபட்ட கலாசாரத்தைதான் அமெரிக்கர்கள் வழக்கமாக விரும்புவர். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமையை, அமெரிக்க அரசியல் சாசனம் உறுதி செய்கிறது. ஆனால், அதிபர் டிரம்பின் புதிய அறிவிப்பு குறுகிய பார்வை உடையதாக உள்ளது. அனைவருக்கும் சம உரிமை என்பதுதான் அமெரிக்க பாரம்பரியத்தின் அழகு. கல்வி, திறமை போன்றவற்றுக்கு புள்ளிகள் வழங்கி ஒருவரை வேறுபடுத்தக் கூடாது. பல ஆண்டுகாலமாக ஆசியாவைச் சேர்ந்தவர்கள், குடும்பமாகத்தான் இடம் பெயர்ந்துள்ளனர்,’’ என்றார்.

Related Stories: