சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா மாஜி கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிக்கல்: கைது தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விவகாரத்தில் கொல்கத்தா முன்னாள் கமிஷனர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு சிபிஐ.க்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. அதற்கு முன்பு வரை இந்த வழக்கை மேற்கு வங்கத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் விசாரித்து வந்தார். தனது விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட பிறகு, முந்தைய விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்கும்படி ராஜீவ் குமாருக்கு சிபிஐ பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆவணங்களை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வந்தார். மேலும், இநத முறைகேட்டை அவர் மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றிய விசாரணைக்கும் ஆஜராக மறுத்து வந்தார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 8ம் தேதி ராஜீவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். அப்போது அவர் கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்தார். இதனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீசார், சிபிஐ அதிகாரிகளை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்தனர். இதனால், இருதரப்புக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை ராஜீவ் குமார் இல்லத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த போலீசார், அவர்களை கைதும் செய்தனர். பின்னர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்  ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜரானார். அதே நேரம், அவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அனைத்தையும் அழித்து விட்டதால் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என  சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ராஜீவ் குமார் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இம்மாதம் ஆரம்பத்தில் உத்தரவிட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வு நீதிபதிகளான இந்திரா பானர்ஜி, சஞ்ஜீவ் கன்னா நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். அதில், ‘சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இருப்பினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த 7 நாட்களுக்கு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்யக் கூடாது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் குமார் முன்ஜாமீன் கேட்டு அணுகிக் கொள்ளலாம். அந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து வழக்கு விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, ராஜீவ் குமார் முன் ஜாமீன் கேட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்யலாம். அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

Related Stories: