மனைவியை எஸ்.ஐ. அபகரித்து விட்டார்: வாட்ஸ் அப் வீடியோவில் வாலிபர் கதறல்

களியக்காவிளை : களியக்காவிளையை அடுத்த சூரியகோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை வாலிபர் தனது செல்போனில் இருந்து ஒரு வீடியோவை பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் தனது மனைவியை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அபகரித்து வைத்திருப்பதாகவும், இதனால் தான் மிகவும் மனம் உடைந்துள்ளதாகவும், இதனால் தான் சாகப்போவதாகவும், இது தமிழக அரசுக்கு வெட்கக்கேடான சம்பவம் எனவும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் போலீசில் புகார் செய்திருந்தார்.

அதில் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் வருவதாகவும், அப்போது குடித்துவிட்டு தன்னையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துவதாகவும், அவரை விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் இருவரையும் காவல் நிலையம் வரவழைத்தார். வாலிபரிடம் பேசிய எஸ்ஐ இனி குடித்துவிட்டு மனைவியை தொந்தரவு செய்யக்கூடாது. அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார்.

அந்த பெண்ணிடம் சற்று அனுசரித்து செல்லுங்கள். மீண்டும் துன்புறுத்தினால் போன் செய்து கூறுங்கள். நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். அதன்பின் வாலிபர் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார். இருப்பினும் மனைவி போலீசில் புகார் தெரிவித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: