பாஜ - திரிணாமுல் வன்முறையால் மேற்கு வங்கத்தில் பிரசாரத்துக்கு தடை: நாட்டிலேயே முதல் முறையாக ஒரு நாள் முன்னதாக முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

*உள்துறை செயலாளர், உளவுத்துறை ஏடிஜிபி அதிரடி மாற்றம்

புதுடெல்லி, மே 16: கொல்கத்தாவில் பாஜ -  திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் ஒருநாள் முன்னதாகவே பிரசாரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நாட்டிலேயே முதல் முறையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 பயன்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக, இதுபோல் பிரசாரம் நிறுத்தப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. மேலும், தேர்தல் பணியில் இருந்து மாநில உள்துறை செயலாளரும், உளவுத்துறை ஏடிஜிபி.யும் நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டதில், இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. இதில், 33 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 7வது மற்றும் இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இம்மாநில தேர்தல் பிரசாரத்தில் ஆரம்பம் முதலே பாஜ - ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டியும், மோதலும் நிலவி வந்தது.

இறுதிக்கட்ட தேர்தலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஜாதவ்பூரில் அவர் பங்கேற்க இருந்த கூட்டத்திற்கு மாநில அரசு அனுமதி மறுத்ததால் இரு கட்சி தொண்டர்கள் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், மம்தா அரசுக்கு சவால்விடும் வகையில், கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் பிரமாண்ட சாலைப் பேரணி நேற்று முன்தினம் மாலை நடந்தது. இப்பேரணியின் போது, கல்லூரி மாணவர்கள் சிலர் அமித் ஷாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜ தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்க பெரும் வன்முறை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். கல்லூரி வளாகத்தில் இருந்த தத்துவ மேதை வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த வன்முறைக்கு பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டன. பாஜ தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்ட வீடியோக்களை திரிணாமுல் காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதற்கு பதிலடியாக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறை செய்வது போன்ற போட்டோ ஆதாரங்களை அமித்ஷா வெளியிட்டார். இதுதொடர்பான புகாரில் அமித் ஷா மீது கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்ததால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், நாட்டிலே முதல்முறையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324ஐ பயன்படுத்தி, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு ஒருநாள் முன்னதாகவே தடை விதித்து தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனால், இன்றிரவு 10 மணியுடன் இம்மாநிலத்தில் பிரசாரம் முடிவுக்கு வந்தது. 7வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம், தேர்தல் அட்டவணையின்படி நாளை மாலைதான் முடியும். இது குறித்து துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷண் குமார் டெல்லியில் நேற்றிரவு அளித்த பேட்டியில், ‘‘மேற்கு வங்க மாநிலத்தில் இன்று (வியாழன்) இரவு 10 மணியுடன் அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இதற்காக முதல் முறையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 பயன்படுத்தப்பட்டுள்ளது. வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டு நடந்த வன்முறை கவலை அளிக்கிறது. இதற்கு காரணமானவர்களை மாநில அரசு கண்டுபிடிக்கும் என நம்புகிறோம்,’’ என்றார். மேலும், இம்மாநில உளவுத்துறை ஏடிஜிபி ராஜீவ் குமாரை அந்த பதவியிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. இவர் இன்று காலை 10 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, தேர்தல் பணியில் குறுக்கீடு செய்ததாக எழுந்த புகாரால், மாநில உள்துறை முதன்மை செயலாளர் அட்ரி பட்டாச்சாரியாவும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த பொறுப்பு, தலைமை செயலாளருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை சுதந்திரமாக நியாயமாக நடத்தவே சட்டப்பிரிவு 324 பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மோடிக்காக ஆடும் தேர்தல் ஆணையம்: மம்தா கடும் விமர்சனம்

தேர்தல் ஆணைய உத்தரவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்றிரவு அளித்த பேட்டியில், ‘‘அமித்ஷா திட்டமிட்டு நடத்திய வன்முறை இது. மேற்கு வங்க மக்கள் இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அமித்ஷா தனது பேட்டியில் கூட தேர்தல் ஆணையத்தை மிரட்டும் தொணியில் பேசி இருக்கிறார். அவரது பேரணிக்கு சுமார் ரூ.20 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. பாஜவின் கட்டளைப்படிதான் தேர்தல் ஆணையம் ஆடுகிறது. இதுபோன்ற தேர்தல் ஆணையத்தை நான் பார்த்தது இல்லை. அங்கு முழுவதும் ஆர்எஸ்எஸ் ஆட்கள் பணியாற்றுகிறார்கள். எதற்காக இன்று ஒருநாள் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது? இங்கு பிரதமர் மோடி இன்று 2 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதற்காக இன்று ஒரு நாள் தடை விதிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக என்னை எதிர்க்க முடியாதவர் மோடி. தனது மனைவியையே பார்த்துக் கொள்ள முடியாதவர்; அவர் நாட்டை எப்படி பாதுகாப்பார்? அவர் வெளியேற்றப்பட வேண்டும். வன்முறைக்காக அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு எதிராக மட்டுமே தேர்தல் ஆணையமே சதி செய்கிறது’’ என்றார்.

Related Stories:

>