விருதுநகரில் அனுமதியின்றி செயல்படும் 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இடைகாலத்தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

விருதுநகர்: விருதுநகரில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வீரப்பெருமாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விருதுநகர் மாவட்டம் கடும் வறட்சி மிகுந்த பகுதி. இங்கு நிலத்தடி நீர் என்பது கேள்விக்குறியான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் குடிப்பதற்கு நீர் கிடைப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில், சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுள்ளி, அருப்புக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு (மினரல் வாட்டர்) நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், சுமார் 21 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் மாவட்ட அதிகாரியிடம் அனுமதி பெற்றிருந்தாலும், அனுமதி வாங்கிய அளவை விட அதிக அளவில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவதால் சுற்றியுள்ள கண்மாய்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதில், சுத்திகரிப்பு நிலையங்களை முறைப்படுத்த வேண்டும். குடிநீர் நிலையங்களை கண்காணிப்பதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நிறுவனங்களுக்கு தடை உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் செயல்படும் 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை விடுமுறை காலம் முடிந்த பின்பு விரிவாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: