மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு நாளை மறுநாள் விசாரணை: உச்சநீதிமன்றம்

டெல்லி : மதுரையில் மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு மே17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி மதுரையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மதுரையில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐகோர்ட்டில் தொடுத்த மனு தள்ளுபடி:

முன்னதாக மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த மார்ச் 31ம் தேதியன்று சௌராஷ்டிரா இன மக்களுடன் அதிமுக கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வகைகள், உணவு,பரிசு பொருட்கள் மற்றும் நபர் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்திருந்தார்.

தேர்தலுக்காக கட்சிகள் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா மற்றும் பணம் செலவு செய்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்த சூழலில் மதுரையில் மக்களவை தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த இயலாது. எனவே மக்களவை தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொதுநலம் என்ற பெயரில் இதுபோல வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக கே.கே.ரமேஷ்க்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு: மே 17ல் விசாரணை

இந்த நிலையில் ஐகோர்ட் நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். வாக்கு பதிவு இயந்திர அறைக்குள் தாசில்தார் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தேர்தல் வாக்குபதிவின் போது வெளியூர்களில் இருந்து பல நபர்களை அழைத்து கள்ளஓட்டு போடப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படாமலே இருந்தது. இதையடுத்து, தேர்தலை ரத்து செய்யக்கோரும் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் கே.கே.ரமேஷ் சார்பில் கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் முன்பு இன்று முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நாளை மறுநாள் (மே 17ம் தேதி) அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியுள்ளனர்.

Related Stories: