டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கமல் மீது கிரிமினல் வழக்கு

புதுடெல்லி; மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்  செய்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என பேசினார். இதை பாஜ கண்டித்துள்ளது. கமல்ஹாசனின் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையேல் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜவை சார்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்து சேனா அமைப்பின் தரப்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” இந்து மக்கள் மற்றும் மதங்களை வேதனைப் படுத்தும் விதமாக பிரசாரம் மேற்கொண்ட  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை வேண்டும். தேர்தல் ஆதாயத்திற்காக அவர் பேசியுள்ளதை கண்டிப்பாக ஏற்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மனுவை  பரிசீலனை செய்த நீதிமன்றம் வழக்கை வரும் 16ம் தேதி விசாரணை மேற்கொள்வதாக நேற்று உத்தரவிட்டுள்ளது.டெல்லி மந்திர் காவல் நிலையத்திலும் கமல் மீது இந்து அமைப்பு புகார் தந்துள்ளது.

Related Stories: