கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே வாலிபர்களை துரத்தி சென்று அரிவாள் வெட்டு: பட்டப்பகலில் 4 பேர் கும்பல் வெறிச்செயல்

கோவை: கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நேற்று பட்டப்பகலில் ரவுடி கும்பல் ஒன்று 2 பேரை துரத்தி சென்று அரிவாளால் வெட்டியது. கோவையை அடுத்த பதிகவுண்டர் தோட்டம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிரவீன்(25) என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் கோவை கணபதி பகுதியில் மேலும் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார்.

Advertising
Advertising

இந்த இரண்டு கொலை வழக்கிலும் குற்றவாளிகளை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதே வழக்கில் கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் பிரதீப் (19), நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இவர், நேற்று காலை கோவை ஜே.எம். கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர், தனது நண்பர் தமிழ்வாணன் (19) என்பவருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கோவை நீதிமன்றம் அருகே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக பஸ் ஸ்டாப் முன் இவர்களை இரண்டு பைக்கில் வந்த 4 பேர் வழி மறித்தனர். அரிவாள், கத்தியுடன் வந்திருந்த அவர்கள், 2 பேரையும் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த 2 பேரும், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் கணபதியை சேர்ந்த ரவுடிகள் சதீஷ் (25), சூர்யா (27), தனபால் (27), ஹரி (26) என தெரியவந்தது. இவர்கள் மீது கோவை நகரில் அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்கு இருக்கிறது.

மக்களிடம் அரிவாளை காட்டி மிரட்டல்: போலீஸ் கமிஷனர் அலுவலக பஸ் ஸ்டாப்பில், மக்கள் கூட்டம் இருக்கும்போதே 2 பேரை பைக்கில் வந்தவர்கள் குறுக்கே நிறுத்தி வழி மறித்துள்ளனர். 4 பேர் கையிலும் கத்தி, அரிவாள் இருந்துள்ளது. மக்கள் அவர்களை தடுக்க சென்றபோது அரிவாளை காட்டி, ‘ஓடி போங்க, வராதீங்க’ என மிரட்டியுள்ளனர்.

Related Stories: