திருப்பதியில் திருக்கல்யாணம் கோலாகல தொடக்கம் தங்க யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா: தங்க பல்லக்குகளில் தாயார்கள் எழுந்தருளினர்

திருமலை: திருப்பதியில் பத்மாவதி - சீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி - சீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் (பரினய உற்சவம்) கோலாகலமாக நேற்று தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் நான்குமாடவீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு நாராயணகிரி பூங்காவை வந்தடைந்தார். தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ மூர்த்திகளும் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து பூங்காவில் மணப்பெண்களை பார்த்து பெருமாள் முதலில் மாலை மாற்றினார். பின்னர் சம்பிரதாயப்படி பட்டுப்புடவைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, வேத மந்திரங்கள் முழங்க திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி திருக்கல்யாண சம்மதத்தை தெரிவித்துக்கொண்டனர். இதில் இறைவனது திருக்கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட மகிழ்ச்சியால் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர். இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

Related Stories: